ஓமந்தை ஆலயத்தை சுத்தம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு ஆலய நிருவாகம் கண்டனம்

omanthai
omanthai

ஓமந்தை மாளிகை காட்டு விநாயகர் ஆலயத்தை சுத்தம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு தமது கண்டனத்தினை தெரிவித்து வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் இந்து கலாச்சார அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்கள் தொடர்பாகவும், இந்து சமயம் சம்பந்தமான விடயங்களிலும் சேவைக்கு வருபவர்கள் தண்டனை அனுபவிப்பதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தொல்பொருள் திணைக்களம் எதேச்சையாக எதுவித முன்னறிவித்தலுமின்றி காலம் கடந்த செயற்பாட்டில் ஈடுபட்டு மக்களை சீர்குலைப்பதனையும், அவர்களை குழப்பி துன்பத்தில் ஆழ்த்துவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே, தற்போது நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடன் விடுவிக்கவும். மேற்படி, ஆலயம் தொடர்பில் பொதுமக்கள் அபிவிருத்தி செய்து வழிபாடு செய்யவும் தொல்பொருள் திணைக்களம் தலையிடாது இருக்கவும் ஆவன செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை மாளிகை கிராமத்தில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலய வளாகத்தை சுத்தம் செய்தபோது ஆலய வளாகத்தில் இருந்த புராதன சின்னங்களை சேதப்படுத்துயதாக தெரிவித்து ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.