பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் மீது நடவடிக்கை

210205 P2P Day3 Mullaitivu
210205 P2P Day3 Mullaitivu

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுக் காவல்துறையினரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த B அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ,வினோ நோகராதலிங்கம், துரைராசா ரவிகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் மதத்தலைவர்களின் பெயர்களும் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்கு பற்றமுடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி தடையுத்தரவை காவல்துறையினர் பெற்றிருந்த நிலையில் கடந்த 05 .02.2021 அன்று பேரணி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.