முன்னாள் முதலமைச்சரை நோக்கிப் படையெடுக்கும் கட்சிகள் – சிக்கலோ ஆசனப் பங்கீட்டில்!

Election risult 2
Election risult 2


இன்னமும் 4 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது உறுதி. உறங்கிக் கிடந்த கட்சிகள் எல்லாம் உற்சாகமாகமடைய ஆரம்பித்து விட்டன. கன்னித் தேர்தலை சந்திக்கும் தமிழ் மக்கள் கூட்டணி அதி உற்சாகமாக உள்ளது. ஆசனப் பங்கீடு விவகாரம் இப்போதே கூட்டணிக்குள் சூடுபிடித்து விட்டது.

எது எப்படியோ, தமிழர் தாயகத்தில் இம்முறை பலமான போட்டி நிலவப் போகிறது. முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய முன்னணி என ஐந்து முனைப் போட்டி நிலவுவது உறுதி.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் க. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கூட்டணியில் தற்போது, சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான  ஈ.பி.ஆர்.எல்.எவ்., அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழ சுயாட்சிக் கழகம், பொ. ஐங்கரநேசன் தலைமையிலான தமிழத் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் உள்ளன.

ரெலோவில் இருந்து வெளியேறிய எம்.கே. சிவாஜிலிங்கமும், இடைநிறுத்தப்பட்டுள்ள என். ஸ்ரீகாந்தாவும் விரைவில் கூட்டணியில் ஐக்கியமாவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இக்கூட்டில் இணைக்கத் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த ஆலோசனை வழங்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள் சிலர் ஓடித் திரிகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, கூட்டணியின் ஆசனப் பங்கீட்டில் பங்காளிக் கட்சிகள் அதிகம் முட்டிக் கொள்வது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்தான். கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைமைகள் யாழ். தேர்தல் மாவட்டத்தவர்களாகவே உள்ளனர். அது மட்டுமின்றி சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் போன்ற கட்சிகளுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டினால் செல்வாக்கு மட்டுமல்ல போட்டியிடுவதற்கு ஆட்களும் கிடையாது. இக்காரணங்களால், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்களுக்கு ஆசனம் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள்.

பெரும்சோதனை என்னவென்றால், ஒரு காலத்தில் 9 ஆசனங்களைக் கொண்ட யாழ். தேர்தல் மாவட்டத்தில் இப்போது இருப்பதோ 6 ஆசனங்களே, இது கடந்த தேர்தலிலும் பார்க்க ஒரு ஆசனம் குறைவாகும். நடப்பது விகிதாசாரத் தேர்தல் என்பதால் கூட்டணியின் சார்பில் 9 வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். இங்குதான் கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தர்மசங்கடமே.

அனந்தி, ஐங்கரநேசன் ஆகியோர் ஒவ்வொரு ஆசனம் கேட்கிறார்கள். பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் கோரிக்கையை மறுக்க முடியாது. தமிழ் மக்கள் கூட்டணி பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்திலேயே அவர்கள் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்போதைக்கு இது தொடர்பில் அலட்டிக்கொள்ளாத போதிலும் அக்கட்சியின் தலைவர் எப்படியும் தனக்கு ஆசனம் ஒன்றைக் கேட்கத் தயாராகி வருகிறார் எனத் தெரிகிறது.

இதுதவிர, கூட்டணியில் இணையப் பேச்சு நடத்தும் ஸ்ரீகாந்தாவும், சிவாஜிலிங்கமும் தங்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் கேட்பார்கள். மீதமிருப்பது 4 ஆசனங்கள்தான். இதில் இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ். கேட்கிறது. ஆரம்பத்தில் இருந்தே கூட்டணியில் இணைந்து செயற்படும் கட்சி, தமிழர்களிடம் குறிப்பிட்டளவு வாக்கு வங்கியுள்ள கட்சி – பழைமையான கட்சி என்ற அடிப்படையில் இக்கட்சி தனது கோட்டாவைக் கைவிடாத வகையிலேயே பேசி வருகிறது. தாய்க்கட்சியாக செயற்படும் தமிழ் மக்கள் கூட்டணி தனக்கு 3 ஆசனங்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கத் தயாராகவில்லை.

வேட்பாளர் பட்டியல் எண்ணிக்கையைவிட கட்சி ஒதுக்கீடு விஞ்சி நிற்பதால், அது உள்ளுக்குள் புகைச்சல் மெல்ல ஆரம்பித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்தக் கூட்டணியில் இணைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தியுள்ளதாக தூது வட்டாரங்களில் முக்கியமான ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தக் கூட்டணி விடயத்தில் அவர்கள் உண்மையிலேயே உறுதியாக  இருக்கிறார்களா அல்லது வழமைபோல் தலையாட்டிவிட்டு பிறகு தனித்துக் கேட்பார்களா என்ற குழப்பம் கூட்டணித் தலைவரான க.வி. விக்னேஸ்வரனுக்கு உண்டு.  இதுதொடர்பில் அவரும் கட்சியினரிடம் பிரஸ்தாபித்தே இருக்கிறார்.

மேலும், விக்னேஸ்வரன் காங்கிரஸ் விடயத்தில்  தொடர்ந்தும் நம்பிக்கையற்றவராகவே உள்ளார் என்றே தெரிகிறது. இருந்தபோதும் கூட்டணிக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வந்தால் அரவணைத்துச் செல்லவே தயாராக இருக்கிறார் என்கிறது அந்த தூதுப் பட்சி. ஒருவேளை, காங்கிரசும் கூட்டணிக்குள் வந்தால் யாழ்ப்பாணத்தில் இரு ஆசனங்களைக் கேட்கும் என்று பார்த்தால், அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை விட தங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை அதிகம் கோருவோம் என்றொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

அதில் யாழ்ப்பாணத்தில் 3 அல்லது 2 ஆசனங்களைக் கோரினாலே கூட்டணித் தலைவர் விக்னேஸ்வரனின் பாடுபெரும் திண்டாட்டமாகி விடும். ஏற்கனவே 10 பேரில் ஒருவரை எப்படிக் குறைக்கலாம் எனத் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவருக்கு  முன்னணியினரின் நிலைப்பாடு மேலும் குடைச்சலைக் கொடுக்கும். மாற்றுத் தலைமை பற்றி சிந்திக்கும் இவர்கள் பல கட்சிகளின் கூட்டணியாக சேர்ந்திருப்பது பெரும் துன்பமாக வந்து சேர்ந்திருக்கிறது.