சர்வதேச குற்றவியல் மன்றம் விசாரணையை அரசியல் இலாபங்களுக்காக சிலர் கோருகின்றனர்:இரா.சாணக்கியன்!

R.Sanakkiyan 4
R.Sanakkiyan 4

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் மன்றம் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சமகால அரசியல்தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்த வருடம் மூன்றாவது மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது.கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாம் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழியினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம்.

சில அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர்.இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன.இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் கால அவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன.இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும்.இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம்.

இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட தெரியாமல் உள்ளது. அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர்.அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை.இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும்.11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லிம் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது.இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன் போது ஆதரவாக வாக்களித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர்.ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.

அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்.

2013 ஆண்டு திகண அளுத்கமவில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்.மனித உரிமை என்பது அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது.இவ்வாறான மோசமான நிலையில் இந்நாடு இருக்கின்ற போது தமிழ் பேசும் மக்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று 20 திருத்த சட்டத்திற்கு வாக்களித்துள்ளனர்.

எதற்காக வாக்களித்தார்கள் என்பது பலருக்கு இன்றும் தெளிவில்லை.கடந்த காலத்தில் வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 60 கோடி ரூபா வேலைத்திட்டம் செய்யப்பட்டது.

தற்போது அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மை தரப்பினருக்கு என்ன கிடைத்தது.அந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தும் பலனில்லை எவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள்.

இஸ்லாமிய மக்கள் மறு உலகில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்புகின்றனர்.இவ்வுலகில் அவர்கள் 4 கடமைகளை செய்ய வேண்டும்.இதையாவது செய்யவிடாமல் இருக்கின்ற நிலையில் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தோ அல்லது ஆதரவு தெரிவித்தோ எந்த பலனோ மக்களுக்கு கிடைக்க போவதில்லை.

இதனை நீங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.என்ன கொங்கிறீட் பாதை போட்டாலும் அதனூடாக ஜனாசாக்களை கொண்டு செல்ல முடியவில்லை எனின் அர்த்தமில்லை.இதனால் அம்மக்கள் விரைவில் நீங்கள் செய்த தவறுகளுக்கு பாடம் படிப்பிற்பார்கள் என்பதை விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.