இலங்கைக்கு எதிராக முஸ்லீம் நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் : இரா.சாணக்கியன்!

IMG 03012021 051532 700 x 400 pixel
IMG 03012021 051532 700 x 400 pixel

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் குரல் கொடுக்க முஸ்லீம் நாடுகள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் முஸ்லீம் நாடுகள் சர்வதேச பரப்பில் குரல் கொடுப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் முறைப்பாடு செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 01) அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரனையில் இருந்து தன்னை காப்பாற்ற, இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்ததுடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன் போது ஆதரவாக வாக்களித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர். ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.

அதாவது கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லீங்களின் ஜனசாக்களை நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று செர வேண்டும். 2013 ஆண்டு திகண அளுத்கமவில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்

மனித உரிமை என்பது அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது. இவ்வாறான மோசமான நிலையில் இலங்கை இருக்கின்ற போது தமிழ் பேசும் மக்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று 20ம் திருத்த சட்டத்திற்கு வாக்களித்துள்ளனர். எதற்காக வாக்களித்தார்கள் என்பது பலருக்கு இன்றும் தெளிவில்லை என்று சாணக்கியன் தெரிவித்தார்.