இந்தியாவைப் பகைக்க விரும்பவில்லை :கோட்டா பகிரங்க அறிவிப்பு!

kotta
kotta

முன்னைய அரசு இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவை சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும்.என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசு முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்துக்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன. துறைமுக அபிவிருத்தி விடயங்களில் தொழில்சங்கங்கள் போராடி வருகின்றன.

இதேபோன்றுதான் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் எழுந்த வேளையில் குழுவொன்றை அமைத்து அந்த ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளை ஆராயவும் எனக்கு அறிவிக்கவும் வலியுறுத்தினேன்.

இந்த விடயங்களை ஆராய்ந்த குழுவினர் எம்.சி.சி. ஒப்பந்தம் மோசமானது எனவும், அரசமைப்புக்கு முரணானது எனவும் கூறினர்.

எனவே, இந்த நிலைமைகளை அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் முன் வைத்த முறைமைக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாது என அறிவித்தோம்.

அவர்களின் ஒப்பந்தத்திலிருந்து நாம் வெளியேறி விட்டோம். இன்று நாட்டில் எம்.சி.சி. பிரச்சினை இல்லை. அதனை நாம் நிறுத்திவிட்டோம்.

இப்போது அது தொடர்பில் எவரும் எதுவும் பேசுவதில்லை. அதேபோன்று தற்போது எழுந்துள்ள கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான உடன்படிக்கை. முன்னைய ஆட்சியில் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் இருவருக்கும் முன்பாக அப்போதைய அமைச்சர் சாகல ரத்நாயக்க, இந்தியப் பிரதிநிதிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றுள்ளது. நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கைகளைச் செய்ய மாட்டேன் என தூக்கி வீச முடியாது.

அவ்வாறு செய்தால் தவறான எண்ணக்கருவொன்று உருவாகும். ராஜபக்சக்கள் அனைத்தையும் சீனாவுக்கு கொடுப்பார்கள் எனக் கூறப்படும்.

இது முறையானதல்ல. நாம் எந்த நாட்டுடனும் தொடர்புபட்டுச் செயற்படவில்லை – என்றார்.