ஐ.நாவுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையாம்: கெஹலிய கூறுகின்றார்!

Keheliya Rambukwella 696x391 1
Keheliya Rambukwella 696x391 1

ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு. நாட்டின் நலன் கருதி – உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார். அதில் ஒன்றுதான் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்தை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டின் இறையாண்மையை மீறி ஜனாதிபதி செயற்படமாட்டார்.

புதிய ஆணைக்குழு தயாரிக்கும் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிப்போம். அதில் நாட்டின் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிடுவோம்.

ஜெனிவா விவகாரத்தைத் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படுத்துவதை எதிரணியினர் உடன் நிறுத்த வேண்டும் – என்றார்.