சயந்தனுக்கு வெள்ளிதிசை தமிழரசுக் கட்சிக்கு ஏழரைச் சனி!

ddddddddddddddddd
ddddddddddddddddd

தேர்தல் என்றாலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, யாழ்ப்பாணத்தின் – சாவகச்சேரித் தொகுதி எப்போதும் சிக்கல்தான். இந்தச் சிக்கல் ரவிராஜ் எம்.பியின் அகால மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்கியது.

விகிதாசாரத் தேர்தலுக்கும் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். நடப்பது விகிதாசாரத் தேர்தலாக இருந்தாலும், தேர்தல் நடவடிக்கைகள் மட்டுமல்ல, கட்சி நடவடிக்கைகள்கூட முன்னர் வகுத்த தொகுதி அடிப்படையிலேயே பின்பற்றப்படுகின்றது. கட்சிக்குள் வேட்பாளர் பட்டியலாகட்டும் வேலைத்திட்டங்களாகட்டும் அனைத்தும் தொகுதி அடிப்படையிலேயே இருக்கும். தொகுதி வாரியை விட விகிதாசாரத் தேர்தல் முறைமையில் யாழ். மாவட்டத்துக்கான எம்.பிக்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் சில எம்.பிக்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளையும் கவனிப்பதுண்டு. இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கும். வாக்குகள் எங்கே அதிகமோ – எந்தத் தொகுதிக்கு எம்.பி. இல்லையோ அங்கேதான் மற்றைய எம்.பி. நுழைந்து தனக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பார்.

ரவிராஜின் மரணத்துக்குப் பின்னர், சாவகச்சேரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் எவரும் இல்லை. ஆனால், யாழ். மாவட்டத்திலேயே பெரியதும் – அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சாவகச்சேரிதான். 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர். இதனால், ஏட்டிக்குப் போட்டியாக எம்.பிக்களின் கவனிப்பு தொடர்கிறது. ஆனால், தென்மராட்சி மக்களின் கவலை தங்கள் பிரதேசத்துக்கென ஒரு எம்.பி. இல்லை என்பதுதான்.

2010, 2015 தேர்தல்களில் தென்மராட்சியை சேர்ந்த அ.அருந்தவபாலன் போட்டியிட்டிருந்தார். இரு தேர்தல்களிலும் அவர் தோல்வியையே தழுவினார். எனினும் 2015 தேர்தலில் நடந்த விருப்பு வாக்கு விவகாரம் கூட்டமைப்புக்குப் பெரும் தலையிடியாய் மாற, போனஸ் ஆசனத்தை இரண்டரை வருடங்களுக்கு அப்பகுதியை சேர்ந்தவருக்கே ஒதுக்குவதாக ரவிராஜ் நினைவுநாள் நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் வாக்குறுதி அளித்தார். கட்சியால் வஞ்சிக்கப்பட்ட அருந்தவபாலனுக்கே அப்பதவி செல்ல வே்ணடும் என மக்கள் வலியுறுத்தினர். பிறகு கட்சிக்குள் எழுந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி தேர்தலில் விஸ்வரூபம் எடுத்தது. அருந்தவபாலன் கட்சியை விட்டு விலகினார். அவர் விலகும் சூழ்நிலைக்கு வித்திட்டவர் அப்போதைய மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.

அடுத்தவர்களின் காணியையே அடித்துப் பிடுங்குபவர்கள் நம் அரசியல்வாதிகள். அதுவும் கேட்பாரற்ற காணி என்றால் கேட்கவே வேண்டாம். பிரதிநிதித்துவம் இல்லாத – அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியை சும்மா விட்டுவிடுவார்களா என்ன? கூட்டமைப்பு எம்.பிமார் எல்லோரும் தென்மராட்சியை ஆளாளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். சுமந்திரன், மாவை. சேனாதிராஜா, சரவணபவன், ஸ்ரீதரன் என தென்மராட்சி வாக்குகளுக்காக முட்டி மோதுகிறார்கள். இதற்காக சிலர் தங்களை அந்த மண்ணின் மைந்தனாகக் காட்டுவதற்குக்கூட முயல்கிறார்கள்.

தேர்தல் நெருங்கி விட்டது, அருந்தவபாலன் இப்போது விக்னேஸ்வரன் அணியில் சேர்ந்து விட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்மராட்சியை சேர்ந்தவரை நிறுத்தாவிடின் மக்கள் அருந்தவபாலனை ஆதரித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனிடையே அருந்தவபாலனை கட்சியை விட்டு விலகிப் போகச் செய்த சயந்தனை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சயந்தனை இத்தேர்தலில் களமிறக்க வாக்களித்திருப்பவர் சுமந்திரன் என்பதால், சயந்தனே நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கலாம். இதில் சுமந்திரனுக்கான ஆதாயமும் அதிகமுண்டு. 

இந்த விடயம் கட்சிக்குள் கொஞ்சம் புகைய ஆரம்பித்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது இப்போது எம்.பிக்களாக இருக்கும் பலருக்கு தென்மராட்சியை சேர்ந்தவரை வேட்பாளராக்குவதில் விருப்பமில்லை. எங்கே தங்கள் வாக்குகள் அடிபட்டுப் போய் விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம். எங்கே சயந்தனை வேட்பாளராக நிறுத்தினால், கிடைக்கும் வாக்குகளும் கிடைக்காமல் மறுபக்கம் போய்விடுமோ என்றும் இந்த எம்.பிக்கள் அச்சப்படுகிறார்கள்.

காரணம், சயந்தனின் கடந்த கால செயற்பாடுகள்தான். தொழில்முறையால் அவர் ஒரு சட்டத்தரணி. சட்டத்தரணிக்கு நண்பர்கள் குற்றவாளிகளும், தண்டனை பெற்றவர்களும்தான் என்றொரு வழக்கு உண்டு. இதற்கு உதாரணமாக இருப்பவர் இவர். பெண் கிராம உத்தியோகத்தர் கடத்தல், மருத்துவமனைக்குள் புகுந்து வாள்வெட்டில் ஈடுபட்டமை எனப் பல குற்றச்செயல்கள் இவரைச் சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் நடத்தப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றங்கள் குறித்து வழக்குகள் நடக்கின்றன. இதைவிட, பெண் ஒருவரின் பெயரில் போலியான சமூகவலைத்தளத்தில் சிக்கித் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டவர். மாகாண சபையிலும் இவரின் நடவடிக்கைகள் மோசமாகவே இருந்தன. இறுதியாக ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பகிரங்கக் கூட்டம் நடத்த வேண்டும் என உறுதியாக நின்றவர். இவரின் இந்த சின்னப்பிள்ளைத்தனமான நடவடிக்கை தென்னிலங்கையின் இனவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. இவரை நியமித்தால் கட்சியின் பெயரே கெட்டுவிடும் என்பது எதிர்ப்பவர்களின் வாதம்.

ஆனால், தனக்குப் பச்சைக் கொடி காட்டியவரின் முடிவுதான் அனைத்துமே என்பதால் சயந்தன் சத்தமின்றி இருக்கிறார் என்கின்றன அவரை நன்கு தெரிந்த தரப்புக்கள். சயந்தன் வேட்பாளராக நியமித்து கையை சுட்டுக்கொள்ளுமா அல்லது மாற்று அணிக்கு வாய்ப்பு போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.