எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை நடைபவணி காட்டுகின்றது – நா.உ சுமந்திரன்!

06 1
06 1

பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பேரான்மை ஆட்சி, எங்களை அடக்குகின்ற ஆட்சி, எங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்கின்ற முறையை எதிர்த்து பல விடயங்களை முன்வைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் எங்களோடு மக்கள் இணைந்து போராடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சனையாகவுள்ள ஜனாசா எரிப்பு விவகாரத்தினையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள், எங்களது அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி செய்யப்பட வேண்டும். எங்களது நிலங்கள் அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்று சொல்லிச் சொல்லி இழுத்தடிப்பு செய்கின்றார்கள். அது கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும்தான் முகம் கொடுக்க முடியும்.

இதுவரைக்கும் எங்களை தனித் தனியாக கையாண்டார்கள். எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக சொல்கின்றோம். அதனை தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும். ஒருவொருக்கு ஒருவர் உதவியாக தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் சிறுபான்மை இனத்தவர்களல்ல. நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள்.

நாங்களும் ஒரு மக்கள் எங்களுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. எங்களுக்கு ஒரு மொழி இருக்கின்றது. அடையாளம், சமயம் இருக்கின்றது. இவற்றை பாதுகாக்கும் சம பிரஜைகளாக நாட்டில் வாழ்வதற்கான உரிமையை கேட்டு நாங்கள் இந்த நடை பவணியை நடாத்துகின்றோம். அனைவரும் சேர்ந்து எங்களோடு வரவேண்டும் என்றார்.

குறித்த பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செல்வராசா கஜேந்திரன், கருணாகரன், சிறிதரன், அ.கலையரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் இன ஒற்றுமையுடன் பங்கேற்றனர்.