இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! – ரிஷாத் அழைப்பு

unnamed file
unnamed file

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

என்று அழைப்பு விடுத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சிறுபான்மை இன மக்களை இலக்குவைத்து இந்த அரசு மோசமான அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இதற்கு எதிராகவும் ஐ.நாவிடம் நீதி வேண்டியும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் இந்தப் பேரணியில் முஸ்லிம் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையூடாக நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்தநிலையில், எமது அழைப்புக்கிணங்கவும் அரசுக்கு எதிரான தங்கள் மனக்குமுறல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்  பெருந்திரளான முஸ்லிம்கள் வீதியில் இறங்கி பேரணியில் பங்கேற்று தமது முழு ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களுடன் கைகோர்த்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எனது கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான இந்த எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது.

தமிழ் – முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பேரெழுச்சியைப் பார்த்தாவது இலங்கை அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு நீதியை வழங்க ஐ.நா. முன்வரவேண்டும். இது ஐ.நாவின் பிரதான கடமையாகும் என்றார்.