மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் தமிழர் வரலாறுகள்!

NandiFlag
NandiFlag

அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடாவடியாக குருந்தூர் ஆலய பிரதேசம் புத்தரை வைத்து அகழ்வுகள் மேற்கொண்டிருந்ததனை நாம் அனைவரும் அறிந்ததே.

இது பற்றி சர்வதேச இந்துஇளைஞர் பேரவைத்தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் ஊடகங்களுக்கு இன்று (10) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிக அண்மைய காலங்களில் தொல்பொருட் திணைக்களமானது பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது இந்து சைவப்பாரம்பரியங்கள் மிக்க இடங்களை பௌத்தத்திற்குரியவையாக சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்தவகையில் மிக அண்மையில் கையகப்படுத்தப்பட்ட இடமே குருந்தூர் மலைப்பகுதி. அதற்கு பௌத்தபிக்குமார்களும் பல வியாக்கியானங்களை வெளியிட்டிருந்தனர். குருந்தகம விகாரை என்றெல்லாம் கதை சொன்னதை நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால் உண்மைகள் ஒருகாலமும் உறங்குவதில்லை அவை தக்க சமயத்தில் வெளிக்கொணரப்படும் என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இற்றைக்கு 2400 வருட வரலாற்றினைக் கொண்ட பௌத்தம் யுகங்கள் தாண்டிய எம்மதச் சின்னங்களை உரிமை கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆக எமது சின்னங்களை வழிபாட்டெச்சங்களை உரிமை கூறுவதை இனியாவது நிறுத்திக்கொண்டால் அது அவர்களுக்கு அழகு.

இவர்களால் இலங்கையில் மட்டுமே வரலாறுகளை மாற்ற முடியும் உலகில் உள்ள வரலாறுகளை மாற்றமுடியாது. தற்போது குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர் காலத்திற்குரியது. அது தாராலிங்கம் என அழைக்கப்படுகிறது. ஈழத்தில் சோழர் காலத்திற்கு முந்தியே பெரும் சிவவழிபாட்டு இடங்கள் இருந்துள்ளது.

எனவே ஈழம் முழுவதுமே சிவனேயச் செல்வர்கள் வாழ்ந்த பூமி என்பதனை இனியாவது ஏனைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மை என்பது நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாதது என்று விளங்கிக் கொள்ளட்டும் என்றுள்ளது