தமிழர்களின் உரிமைகள் குறித்து பேசும் போது அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

.jpg
.jpg

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

அரசியல் கைதிகளில் பலர் நான் பிறப்பதற்கு முதல் இருந்தே சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அதிலும் தற்போது ஒரு சில வருடங்களாக அவர்கள் இறந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ஆகும். வட கிழக்கு முழுவதிலும் இதனை சொல்லி இருந்தீர்கள். நாமல் ராஜபக்க்ஷ அவர்களும் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது இதனை வலியுறுத்தி இருந்தார். அதிலும் ஜேவிபி காலத்தில் நடந்த விடயங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதாவது கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மிக முக்கியமாக உரைக்கப்பட்ட விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகும்.ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதனைக் கொண்டு நீங்கள் எவற்றை சாதிக்கப்போகின்றீர்கள்? மற்றும்  முன் நிறுத்தப் போகின்றீர்கள்? அவர்களை உள்ளே வைத்திருப்பது உங்கள் அரசியல் இலாபத்துக்கான  திட்டமா?. அல்லது  நீண்ட கால உங்கள்  திட்டத்துக்காக வைத்திருக்கிறீர்களா?

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. இது பொதுவாக மக்களால் முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.  எனது குடும்பத்தார் அல்லது நண்பர்களோ உறவினர்களோ அரசியல் கைதிகளாக இல்லை. இவற்றை நான் கேட்பது பாதிக்கப்பட்ட எனது மக்களுக்காக மாத்திரமே.

இவற்றை நாம் கூறிக் கொண்டு இருக்கும்போது என்னை பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள்.

உங்களுடைய வேலை எதுவோ  அதனை சரியாக செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு இவற்றுக்கான மறுப்பு கூறுவதற்கு நீங்கள் பிரதமர் அல்ல, நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன்.

உங்களிடம் அல்ல அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள்.

இங்கு நான் பிரதமருடன், கதைப்பது சில நேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்? என தெரிவித்தார்.