கட்சியினருக்கு “தண்ணி” காட்டும் யாழ். மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்

Election risult
Election risult

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது மேயரும் கட்சியினரும் கோபத்தில் இருக்கின்றனர். பல்கலைக்கழக மாவீரர் நாள் கடைப்பிடிப்பு மூலம் அதனால் விளைந்த அனுதாபத்தை மூலமாகக் கொண்டு அரசியலுக்கு நுழைந்தவர் அவர். தற்போது ஆசியரியராகக் கடமையாற்றும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் கட்சி தயாராகி வருகின்றது.

யாழ். மாநகர சபையை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பித்தது. கடந்த வருடம் போன்று சாதாரண அங்கீகாரமே இம்முறையும் போதும் என்ற நிலையிலேயே ஆளும் கட்சியினர் இருந்தனர். விட்டேத்தித்தனமான செயல்களையே சபையில் முன்னெடுக்கும் மேயரும் அப்படியே கருதினார். எனினும் வாக்கெடுப்புக்குக் கோரினால் என்ற அச்சமும் இருந்தது. இதனால், பட்ஜெட் சமர்ப்பிக்கும் நாளான – நவம்பர் 21 ஆம் திகதி ஆளும் கட்சியினர் அனைவரும் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்ததே தவிர, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களிடத்தில் இல்லை. இதனால் முடிந்தவரை தங்கள் கட்சியினர் சபையில் இருக்க வேண்டும் என்று மேயர் கருதியிருந்தார். முடிந்தவரை பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடுவதில்லை சாதாரண அங்கீகாரத்துடனேயே நிறைவேற்றுவது என்ற முடிவிலேயே செயற்பட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்கவே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. முடிவு எதிர்பார்த்தது போலவே ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன. ஆளும் கட்சிக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தத் தோல்வியின் கோபம் எல்லாம் இப்போது திரும்பியிருப்பது சமுகமளிக்காத உறுப்பினர் மீதுதானாம். ஏற்கனவே முன்னறிவிப்புக் கொடுத்தும் அந்த உறுப்பினர் தங்களுக்கு டிமிக்கி விட்டுவிட்டார் என்பதுதானாம் கட்சியினரின் கோபம் எல்லாம். குறித்த உறுப்பினர் அன்றையதினம் வருகை தந்தாலும் தோல்வியைத் தவிர்க்க முடியாது என்றாலும், வாக்கு எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட உதவியிருக்கும். அதைவிட தங்கள் அறிவிப்பை அவர் உதாசீனப்படுத்தி விட்டார் என்பதுதான் மேயரின் அதிகோபத்துக்குக் காரணமாம்.

இதுதொடர்பில் பேசுவதற்காக அவரின் தொலைபேசிக்கு மேயர், கட்சியினர் அழைப்பு எடுத்தாலும் அவர் பதிலளிப்பதில்லை. இப்படியே மேயருக்கும் கட்சியினருக்கும் உறுப்பினர் தொடர்ந்து டிமிக்கி விடுவது அவர்களின் கோபத்தை மேலும் கிளறிவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. குறித்த உறுப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூலமே அரசியலுக்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு ஆசனம் வழங்கப்பட்டதோ புளொட் கட்சியின் ஒதுக்கீட்டில்தான். இப்போது அந்த உறுப்பினர் புளொட் கட்சி உறுப்பினர் ஆகிவிட்டதால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமையை கடிதம் மூலம் கோருவது என முடிவு எடுத்துள்ளனராம்.