கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? – ஆனந்தசங்கரி!

Ananthasangary Press 5
Ananthasangary Press 5

கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களாக ஆயுதம் ஏந்தியவர்களை எவ்வாறு விசாரிப்பது என அன்று இடம்பெற்ற மனித உரிமை அமர்வில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு நான் கடிதம் அனுப்பியிருந்தேன். 40 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். பல்வேறு காரணங்கள் காணப்பட்டிருந்தது. ஆனால் அவர்களையும் விசாரி என்ற தீர்மானத்தை மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அது ஊடகங்களில் பிரதான தலைப்பு செய்தியாகவும் வந்திருந்தது. விசாரிப்பதென்றால் அவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்படவிருந்த தீர்மானத்தில் 8வது சரத்தில் குறிப்பிடப்படவிருந்த மேற்குறித்த விடயம் தொடர்பில் மாற்றத்தினை ஏற்படுத்துமாறு நான் நவநீதம் பிள்ளையிடம் குறிப்பிட்டிருந்தேன் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை யுத்த களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு கட்டளை இட்டவர்களையே விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறெனில் கட்டளையிட்டவர் சரத் பொன்சேகா. மாறாக நடைபெற்ற தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜெனிவாவிற்கு நாங்கள் போகாவிட்டால் துரோகிகளோ என ஒரு கட்டத்தில் சுமந்திரனும் சிறிதரனும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நட்பு நாடுகள் சொல்லிதான் ஜெனிவாவிற்கு போகவில்லை என இன்று கூறுகின்றனர். எமது நாட்டில் சுனாமி உள்ளிட்ட எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் உடனடியாக முன்வருவது இந்தியாதான். சுனாமி நேரத்தில் இந்தியாவிலும் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக இந்தியாதான் வந்தது. இவ்வாறான நிலையில் இந்தியாவை ஒரு சொல் கேட்டிருந்தால் இந்தியா வந்திருக்கும். ஆனால் எம்மவர்கள் கேட்கவில்லை .

இப்போது இந்தியாவிற்கு எதிரான வேலைகள் இடம்பெறுகின்றது. 3 தீவுகளை அரசு ஒரு நாட்டுக்கு கொடுக்க போகின்றது. அவ்வாறு நட்பு நாட்டுக்கு கொடுக்கும்போது, அந்த மூன்று தீவுகளும் அவர்களின் எதிரி நாட்டையே பார்த்துக்கொண்டுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அதேபோல் இலங்கை அரசுக்கு தெரிய வேண்டும். இந்தியாவிற்கு நிச்சயம் அது தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சை தீவை இலங்கைக்கு கொடுத்தபோது இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனையும் மீறியே கொடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நட்பை வழங்குவதற்கான எதிரகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் கச்சை தீவை அவர் வழங்கியிருந்தார். அந்த மூன்று தீவுகளையும் வழங்குவதால் பாரிய பாதிப்பு காணப்படும் நிலையில் ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என்று தெரியவில்லை.

இந்த அரசாங்கத்தை கண்டிக்க எனக்கு என்ன தகுதி இருக்கின்றது? அந்த மூன்று தீவிலும் உள்ள மக்களிற்கான பாதுகாப்பு என்ன? ஓர் போர் மூண்டால் மூன்று தீவுகளும் பஸ்பமாகிவிடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.