ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

20170921 hrc36 news
20170921 hrc36 news

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.

தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு புதிய யோசனையை இந்த முறை கூட்டத்தொடரில் முன்வைப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள 6 நாடுகள் அறிவித்துள்ளன.

இதற்கமைய பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெஷிடோனியா, மொன்டிக்ரோ மற்றம் மலாவி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் மேலும் ஆராய வேண்டிய அவசியமானதென அறிவித்திருந்தன.

இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு குறித்த அனுசரணைமீளப்பெறப்பட்டது.

இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு கோரி அரசாங்கத்தினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

உள்நாட்டு விடயங்களை உள்நாட்டிலேயே தீர்த்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை பல உலக நாடுகள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.