ஜெனிவாப் பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்பு ; 40 அங்கத்துவ நாடுகளின் கருத்து இன்று வெளியாகும்

download 2 15
download 2 15

இலங்கை விடயத்தையொட்டி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்புக்கான பொது கணிப்பீட்டு நிலைமை பெரும்பாலும் இன்று வியாழக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் தெளிவாகும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தமுள்ள 47 அங்கத்துவ நாடுகளில் 40 நாடுகள் இலங்கை சம்பந்தமான பிரேரணை வரைவு தொடர்பில் தமது நிலைப்பாட்டடை இன்று ஜெனிவா நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 2 மணி அளவில்) வரிசையாக வெளிப்படுத்தவுள்ளன

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒன்றரை நிமிடம் முதல் 2 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவை தமது நிலைப்பாட்டை ஓரளவு கோடி காட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக விவாதம் நேற்று புதன்கிழமை மாலையே ஜெனிவா மனித உரிமைகள் சபையில் ஆரம்பமானது. முதலில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை நிலைமை தொடர்பான தமது பரிந்துரையை நிகழ்த்தினார். அதற்குப் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மெய்நிகர் முறையில் உறுப்பு நாடுகளுக்கு தமது கருத்தை வரிசைப்படுத்தி உரையாற்றினார்.

இருவரினதும் உரைகளை அடுத்து, நேரம் பற்றாக்குறையால், விடயம் நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 40 நாடுகளினதும் பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துகளில் இருந்து, இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான பொதுக் கருத்து நிலைப்பாட்டைக் கணிப்பிட முடியும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை மாலைக்குள் அந்த விவரம் வெளியாகும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.