காலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்

.jpg
.jpg

காலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சர்வதேச நகர்வும் தமிழ் தேசிய ஒற்றுமைைகுறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்திலே தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்கின்ற கருத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம். மதத் தலைவர்களும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்கள். இந்த ஒற்றுமையயை நாங்கள் எவ்வாறு தீவிரமாக முன்நகர்த்துவது என்பது பற்றி ஒன்று சேர்ந்திருக்கின்ற கட்சிகளின் அவற்றின் தீர்மானம் எடுக்கின்ற கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்து வெகு விரைவிலே ஒரு கட்டமைப்பாக நாங்கள் முன்னேறுவது குறித்து நடவடிக்கை எடுப்போம்.

நேற்யை தினம் இலங்கை சம்மந்தமான விவாதத்தின் போது பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள். தென்பகுதிகளில் வருகின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியதாகச் சொல்லியிருக்கின்றார்கள். 20 நாடுகளை என்னால் கணக்கிட முடிந்தது. ஆனால், அதிலே 10 நாடுகள் தான் வாக்குரிமை பெற்ற நாடுகள். எனவே 47 நாடுகளில் 10 நாடுகள்தான் இலங்கைக்குச் சார்பாகப் பேசியிருக்கின்றன. ஆனால் பல நாடுகள் நடுநிலைமை பேணக் கூடும் என்கின்ற ஒரு நிலைப்பாடு இன்று காணப்படுகின்றது.

எனவே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது சம்மந்தமாக இந்த இணை அனுசரணை நாடுகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றார்கள். அதை நீர்த்துப் போகப் பண்ணுவதற்காகத் தான் இந்த நாடுகளின் கருத்துக்களைச் செவிமடுத்த பின்னர் தான் கட்டாய ஜனாசா எரிப்பினை நீக்கியிருக்கின்றது இந்த அரசு. அவர்களுடைய எண்ணம் அப்படிச் செய்தால் முஸ்லீம் நாடுகளை அந்தப் பிரேரணைக்கு வக்களிக்காமல் செய்யப் பண்ணலாம் என்ற நப்பாசையில் தான் இதனைச் செய்திருக்கின்றார்கள்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லீம் நாடுகளினுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் மிகத் தெளிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். எனவே இஸ்லாமிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைமாற்ற மாட்டார்கள் என்று நம்புகின்றோம். ஜெனீவாவிலே அவர்களின் வாக்குகளை மழுங்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இறுதி நேரத்திலே செய்திருக்கின்ற முடிவு அவர்களது முடிவை மாற்றாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

அடுத்த விடயமாக காணாமல் போன உறவுகளுடன் ஜனாதிபதி பேச இருக்கின்றார் என்று சொல்லி சில நாடுகளினுடைய ஆதங்கத்தைக் குறைப்பதற்காக கடைசி நேரத்திலே காலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அடுத்த கட்டமாக நாங்கள் எவ்வாறு முன்நகர்த்த வேண்டும் என்ற விடயத்தை ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் கூட்டங்களில் தீர்மானித்ததன் பிறகு அந்த யோசனைகளை ஒன்று சேர்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வோம்.

தமிழ்த் தேசியப் பேரவை என்பது எவ்வித தேர்தல் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை. இது தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்றைக்கு எற்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கான ஒரு அத்தியாவசியத் தேவை. அதைப் பொறுப்போடு நாங்கள் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்குத் தேவையான ஒரு கட்டமைப்பே இது என்று தெரிவித்தார்.