யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் வரவில்லை, நீதியும் வழங்கப்படவில்லை – சிறிநேசன்

Screenshot 20190203 214646 Gallery
Screenshot 20190203 214646 Gallery

யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் வரவில்லை, நீதியும் வழங்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் நேற்று (புதன்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இலங்கையில் நடைபெற்ற போராட்டம் மௌனிக்கப்பட்டு 11ஆண்டுகள் கடந்துவிட்டது.ஆனால் அதன்போது ஏற்பட்ட இனப்படுகொலை, காணாமல்ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை,காணி அபகரிப்பு என பல பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.

யுதத்தின்போது புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் வரவில்லை, நீதி வழங்கப்படவில்லை,மீண்டும் நிகழாமை தொடர்பான உத்திரவாதமளிக்கப்படவில்லை.மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தீர்மானத்தினை புதிய அரசு தூக்கி வீசிவிட்டது.ஆகவே ஐநா மனித உரிமைகள் பேரவைகள் ஊடாக நடாத்தப்படுகின்ற மனித பேரவலம் தொடர்பான விடயத்தினை உதாசீனப்படுத்தம் வகையிலான செயற்பாட்டை இலங்கை முன்னெடுத்து வருகின்றது.

தற்போது 46வது மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகின்றது.மிச்சேல் பட்ஸ்லட் வழங்கிய ஆரம்பக்கட்ட அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.பொறுப்புக்கூறல் விடயம் மாத்திரமல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு குற்றமிழைத்த இலங்கை அரசு சார்ந்தவர்களை கொண்டு செல்லுகின்ற விடயமெல்லாம் சொல்லப்பட்டிருந்தது.ஆனால் ஐந்து நாடுகள் கொண்ட அறிக்கையில் அந்த விடயங்கள் முழுமையாக உள்ளடக்கப்படாமல் சாதாரண விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உள்ளகப்பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்றுப்போயிவிட்டது. 11ஆண்டுகள் உண்மைகள் கண்டறியப்படவில்லை, நீதிவழங்கப்படவில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.இந்த மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆலயம்.கடந்த காலத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் உண்ணா நோன்பிருந்து மரணத்தினை தழுவிக்கொண்ட அன்னைபூபதியார் கூட இந்த இடத்தில்தான் உண்ணா நோன்பிருந்தார்.

அவ்வாறான இடத்தில் நாங்கள் இந்த சாத்வீக ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விடயம் உள்ளக ரீதியாக கிடைக்காத நீதியினை சர்வதேச ரீதியாக கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த கோரிக்கையினை முன்வைக்கின்றோம் என தெரிவித்தார்.