காவல்துறையினர் பூச்சாண்டி காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் என பருதித்துறை நீதிமன்றில் சமர்பணம்!

1562244283 courts 2
1562244283 courts 2

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தின் பின்னர் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது, அதனை இரத்து செய்ய வேண்டும் அதனை வைத்து காவல்துறையினர் பூச்சாண்டி காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் என்று தமிழ்த் தேசியத் தரப்பு சட்டத்தரணிகளால் பருதித்துறை நீதிமன்றில் சமர்பணம் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் பங்குகொண்டமை தொடர்பில் காவல்துறையினரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிரமுகர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளும் வாக்குமூலம் பதியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் பத்திரம் மீதான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதன் போது சட்டத்தரணிகள் சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மணிவண்ணன், சயந்தன் உட்பட்ட 20 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் போது, காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையில் என்ன குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. இதன்படி சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமிழைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஆனால் இந்த வழக்கினை வைத்து காவல்துறையினர் பூச்சாண்டி காட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சட்டக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கமுடியாது என்கிற நிலையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றமும் உடந்தையாகச் செயற்பட முடியாது என்றும் சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் வலியுறுத்தித் தெரிவித்தனர்..

இந்நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.