கடும்போக்கு சிங்களவரைத் திருப்திப்படுத்தவே ஜனாஸா விவகாரத்தைப் பயன்படுத்தியது அரசு-சுமந்திரன்

11 1
11 1

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சினை இல்லை.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

22

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு இந்த இரணைதீவு மக்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் சான்றாக அமைகின்றது.

இரணைதீவு பகுதியில் குடியேறிய மக்களுக்கு வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் கூட இல்லை. வசதிகளைப்  பெற்றுத் தருவதற்கு தொடர்ந்தும் பல முயற்சிகளை நாங்கள் பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம்.

முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எந்தவிதமான விஞ்ஞான ரீதியான பிரச்சினைகளும் இல்லை. உலக நாடுகளிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பர்களை உலகில் 188 நாடுகளில் புதைப்பதற்கான அனுமதிகள் கொடுத்திருந்தபோதும் இதனை ஓர் இனவாதச் செயலாக இலங்கை அரசு தடுத்தது.

இவ்வாறான இனவாதப் போக்கைப் கொண்டிருந்த இலங்கை அரசு ஐ.நாவில் இலங்கை மீது கொண்டுவரப்படும் பிரேரணைக்கு எதிராக இருந்த முஸ்லிம் நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் அல்லது விலகி விடும் என்ற காரணத்தால்தான் ஜனாஸாவை அடக்கம் செய்யும் எண்ணத்தைத் திடீரென மாற்றிக் கொண்டது” – என்றார்.