விக்கியை கொண்டு வந்தால் – நிலாந்தன் எம்.பி ஆகலாம்!!

61
61

தேர்தல் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இரு பெரும் பகைவர்கள் நண்பர்கள் ஆவதும், நெருங்கிய நண்பர்கள் பகைவர்களாவதும் ஒரு சுற்றோட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல் அரசியல்வாதிகளின் அழைப்பு ஒன்றாகவும் அவர்களின் செய்கை அதற்கு மாறாகவும் இருக்கும். அரசியல் சித்து விளையாட்டுக்களில் இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓரணி அறிவிப்பு எதிரணிகளை வீழ்த்தவே என்பது தெளிவாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இம்முறை தனி அணியாக தேர்தலை சந்திக்கிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் கூட்டணியையும் ஓரணியில் சேர வைக்கும் முயற்சிகள் மிகத் தீவிரமாக இடம்பெறுகிறது.

தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இணைக்கப் பேச்சு நடத்தித் தோற்றுப் போன நிலையில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் இந்த முயற்சியையும் கையில் எடுத்திருந்தார். அவர் தனது சந்திப்புக்கு மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கைகளில் இறங்கினார். தூதுவராகக் களமிறங்கியவரை கூட்டமைப்பின் பேச்சாளர் லாவகமாகக் கையாண்டு திருப்பி விட்டுள்ளார்.

அவரின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிய ஆய்வாளர் நிலாந்தனுக்கு விரிக்கப்பட்ட ஆசை வலை என்ன தெரியுமா?

விக்னேஸ்வரனை மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அழைத்து வர வேண்டும். அவ்வாறு அழைத்து வந்தால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பதுதானாம். இது கனவிலும் கூட ஆய்வாளர் எதிர்பார்த்திராத பரிசாம். அதனால், தனது முயற்சிகளை மிகத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறாராம் அவர்.

ஆனால், சுமந்திரனின் இந்த வாக்குறுதி நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் இந்தத் தேசியப் பட்டியல் உறுப்புரிமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜா எம்.பிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

காரணம், சுமந்திரன் எம்.பியின் சிஷ்யப் பிள்ளைகள் எனக் கூறப்படும் கே.சயந்தன், இ.ஆர்னோல்ட் ஆகியோரை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்குவதுதான் கூட்டமைப்பின் – சுமந்திரனின் முடிவு. மாவை. சேனாதிராஜா தேர்தலில் போட்டியிட்டால் இந்த இருவரில் ஒருவர் எம்.பியாக வருவது சந்தேகம். இதனால் அவரைப் போட்டியிட வைக்காமல், தேசியப் பட்டியல் மூலமாக எம்.பியாக ஆக்குவதுதான் திட்டம் என்கிறார்கள்.

இதேநேரம், இம்முறை தேர்தலில் யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகனையும் களமிறக்கும் யோசனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாம். ஆனால், கூட்டமைப்பினரின் இந்த முடிவுக்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு நெருக்கமான தரப்புக்களோ ஓய்வை நெருங்கியுள்ள அரச அதிபர் சாதகமான முடிவையே எடுப்பார் என்கிறார்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.