ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை அரசாங்கம் தண்டிக்கவில்லை – சஜித்

sajith 6
sajith 6

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு , அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கம் அதனை மறந்து செயற்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதிகாரத்தை கைப்பற்றிய அரசாங்கம் , வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னால் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எமது கட்சியின் உறுப்பினர் நளின் பண்டாரவை குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்திருந்தது. கட்சித் தலைவர் என்ற வகையில் எமது உறுப்பினர்களை பாதுகாக்க நான் கடமை பட்டுள்ளேன். அதனடிப்படையிலே நான் இங்கு வந்தேன். இதன்போது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலே பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கே பாரிய பொறுப்பு உள்ளது.அதற்காகவே நாட்டு மக்கள் அவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர்.உயிர்த்தஞாயிறுதின தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்ட பிரதான சூத்திரதாரி மற்றும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்கள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டு , அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. அதனால் அதனை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் அரசாங்கம் இந்த விசாரணைகள் தொடர்பில் காலங்கடத்தி வருகின்றது.

அமெரிக்காவில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் தொடர்பில் , அப்போதைய அமெரிக்க அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன் , அந்த ஆணைக்குழு முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து , அதன் அறிக்கையை பகிரங்கப் படுத்தியிருந்தது. ஆனால் எமது நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் செயற்பாடு அவ்வாறு அமைந்திருக்கவில்லை என்றார்.