வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் – கெஹலிய

ரம்புக்வெல
ரம்புக்வெல

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கு அமைய விருப்பு வாக்குமுறைமையை நீக்கவும் , 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.

அதற்கமைய கடந்த 15 வருடங்களாக அவதானம் செலுத்தப்பட்ட விடயத்திற்கு ஏற்ப தொகுதிகளை எவ்வாறு நிர்ணயிப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டு வெகுவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.

அமைச்சரவையிலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.