தமிழ் மக்களை தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருக்க விரும்புகின்றது அரசு – சுமந்திரன்

sumanthiran500
sumanthiran500

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதையே அரசு விரும்புகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் விசாரணையின் நிமிர்த்தம் யாழ். காவல்துறையினரால் அழைக்கப்பட்டு அதிகாலை வேளையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று மாநகர சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு இந்தக் கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்