கோட்டாவின் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டுவேன்! – விஜயதாஸ சீற்றம்

vijayathasa
vijayathasa

எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தோ அல்லது நான் உள்ளிட்ட எனது குடும்பத்தினரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோ அரசு மிரட்டினால் அதற்கெல்லாம் அடிபணியமாட்டேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொய்முகத்தை அம்பலப்படுத்தியே தீருவேன்.”

என்று கடும் சீற்றத்துடன் தெரிவித்தார் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நான் வசை பாடுகின்றேன் என்று அமைச்சர்கள் சிலர் புலம்புகின்றனர்.

அதேவேளை, ஜனாதிபதி என்னை அச்சுறுத்தவில்லை எனவும், உயிராபத்து எதுவும் எனக்கு இல்லை எனவும் மேலும் சில அமைச்சர்கள் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தத்தமது அமைச்சுப் பதவிகளைத் தக்கவைப்பதற்காக அவர்கள் என்னைத் திட்டித் தீர்க்கலாம். ஆனால், எனக்கோ அமைச்சுப் பதவி பெறும் நோக்கமோ அல்லது அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கமோ இல்லை.

இலங்கையை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் நோக்குடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை. நாடு மீண்டெழ வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். ஆனால், அரசிலுள்ள முக்கிய தரப்பினர் நாட்டைச் சீனாவுக்குத் தாரைவார்த்து அதில் சுகபோகங்களை அனுபவிக்க முயல்கின்றனர்.

இதைத்தான் நான் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினேன். உண்மைகளைக் கூறியமைக்காக நான் சிறை செல்லவும் தயார்” – என்றார்.