பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான் – சுமந்திரன்

m.a.sumanthiran 1

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது. குறிப்பாக எதிரணியினர் இவ்வாறு கூறி திரிகின்றார்கள். ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன். அதில் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன். ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது.

மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம், சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை. இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன். இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என குறிப்பிட்டார்.