நாட்டை காட்டிக் கொடுப்பதற்கான ஆவணமே துறைமுக நகர சட்ட மூலம் – ஹேஷா வித்தானகே

download 21
download 21

நாட்டை மீண்டும் காட்டிக் கொடுப்பதற்கான ஆவணமே துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலமாகும். இதற்கு ஆதரவளிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாய் நாட்டை காட்டிக் கொடுத்தவர்களாகவே வரலாற்றில் குறிப்பிடப்படுவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

போர்த்துக்கேயர் , ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் மீண்டும் மேற்குலகத்திற்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான ஆவணமே துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலமாகும். இதனை அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதிஷ்டவசமாக அதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே

எனவே நாட்டை நேசிக்கின்ற , மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மனசாட்சியின் பிரகாரம் இதற்கு ஆதரவளிக்க முடியும். மாறாக ஆதரவளிப்பார்களாயின் அவர்கள் நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் என்று வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.

எனவே இது தொடர்பில் நாம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். முழுமையான மாற்றங்களுடன் வேறுபட்ட வகையில் இதனை திருத்தியமைத்து செயற்படுத்த வேண்டும். அவ்வாறின்றி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் நாட்டை பாகம் பாகமாக தாரை வார்ப்பதைத் தவிர ராஜபக்க்ஷக்களுக்கு வேறுவழியில்லாமல் போயுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்கின்றோம். நீதித்துறையை ராஜபக்ஷாக்களுக்கு விலைக்கு வாங்க முடியாமல் போயுள்ளது. பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். பகிரங்கமாக கருத்துக்களை தெரிவிக்க முடியாவிட்டாலும் , நாடாளுமன்றத்திலேனும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கோருகின்றோம் என்றார்.