நினைவுகூருவதை தடுக்கும் நிலையிலிருந்து நாம் முன்னேற வேண்டும் – லியோ ஆம்ஸ்ரோங்

IMG 20210517 074652
IMG 20210517 074652

முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முப்பது ஆண்டு காலப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் இரண்டு ஆண்டுகளை, அதாவது பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப்போர் காலங்களிலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் நாளே மே 18.

ஒரு கனத்த இதயங்களோடு தான் இந்த நினைவு கூரலை நாங்கள் சந்திக்கின்றோம். எம்மை சூழ இந்த கொரோனாவினுடைய தாக்கம் அதிகமாக வளர்ந்து வருகிற இந்த பின்னணியில் எமது அயல் நாடாகிய இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில், கொரோனா அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய மருந்துகளின் பின்புலத்தில் இருக்கக்கூடிய புதிய அரசியல் வியாபார நிலைகளுக்கு மத்தியிலே தான், நாங்கள் இந்த பன்னிரெண்டாவது ஆண்டை நினைவுகூறப்போகின்றோம்.

அண்மையிலே கடந்த புதன்கிழமை (12) இரவு வழமையாக நாங்கள் நினைவுகூறுகின்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது.

அதனுடைய ஒரு தூண் சரித்து வீழ்த்தப்பட்டிருந்தது. அதில் இருந்த கைகள் முறித்தெறியப்பட்டிருந்தன. இது 2009 ஆம் ஆண்டு அந்த பகுதி முழுவதும் சிதறடிக்கப்பட்ட எமது உறவுகளினுடைய உடலங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது.

கடந்த காலங்களிலே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பதில் ஒரு சில குழப்பங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

கடந்த இரு ஆண்டுகள் நாங்கள் முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியதன் பின்னர் இரு ஆண்டுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற்றுள்ளன.

இந்த வருடமும் பொதுக்கட்டமைப்பு ஊடாகவே நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். இந்த பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதில் அனைத்து சமூகத் தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இனியும் வழங்குவார்கள்.

இந்த கட்டமைப்பு உருவாகிய சில காலத்தின் பின்னர் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 2020ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கடிக்குள் தான் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இம்முறையும் அதே போன்றதொரு நெருக்கடியில் நாம் உள்ளோம்.

பல தசாப்தங்களாக தமிழின மக்கள் சிங்கள அடக்கு முறையினரால், இவ்வாறு பல்வேறு அசௌகரியங்களை நாங்கள் சந்தித்த வண்ணம் தான் இருக்கிறோம்.

அதற்கான நினைவு கூறுதல் நிகழ்வுகள் தடுக்கப்படுதல், அல்லது நூலகம் எரிக்கப்படுதல் இது போன்ற பல நிகழ்வுகள் எமது கடந்த கால வரலாற்றிலே இருக்க செய்கிறது.

ஆகவே எமது மக்கள் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலை ஒன்றின் ஊடாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்பும் பல்வேறு விதமான நிலைகளிலே அரசு இயந்திரம், மக்கள் மீது இவ்வாறான தொடர்ச்சியான, பல அடக்குமுறைகளை தந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆகவே, இந்த நிலையில் நாங்கள் அந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூறுவது என்பது எமது தார்மீக கடமையாக இருக்கிறது.

ஆகவே இந்த நினைவு கூறலை தடுக்கிற அந்த நிலையிலிருந்து நாங்கள் முன்னேறி செல்ல வேண்டி இருக்கிறது. நிச்சயமாக அந்த பகுதி சிதைக்கப்பட்டமைக்கு எதிராக உலக தலைவர்களும், மக்களும் கண்டனங்களை கொடுக்க வேண்டும்.

அது மீள கட்டப்படக்கூடிய வகையில் பலரும் இதற்கு ஒத்துழை ப்பு தர முன்வர வேண்டும் என்பது இந்த வேளையிலே நாங்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டியதாக இருக்கிறது.

அத்தோடு மக்கள் அனைவரும், இந்த நினைவு கூரலை, தங்களுடைய இல்லங்களில் இருந்து, கொரோனாவினுடைய பரவலின் காரணமாக, இல்லங்கள் இருந்து, இந்த நினைவுகூறலை மேற்கொள்ளுமாறும், அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பாக, தங்கள் பிரதேசத்தில் இருக்கிற அனைத்து ஆலயங்களிலும், மாலை ஆறு மணியளவில் மணிகளை ஒலிக்கச் செய்து, ஒரு அகவணக்கத்தை, மக்கள் அனைவரும் குடும்பமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, விளக்கொன்றை ஏற்றி இறந்தவர்களுக்காக ஜெபிக்க, மன்றாட அழைக்கின்றோம். அத்தோடு அன்றைய நாளிலே, ஒரு நேர உணவாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி உணவை உட்கொள்ளுமாறும், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் வெளியாக, அந்த மக்களுடைய வலியையும், துன்பத்தையும் நாங்களும் சுமந்து, அதை கடந்து செல்லவும், கடத்திச் செல்லவும், வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஆகவே, இந்த விடயத்தை அனைவரும் நினைவு கூர்வோம். நினைவு கூர்தல் என்பது, எங்களுடைய அடிப்படை விடயமாக இருக்கிறது.

இதை அனைவரும் இணைந்து நினைவு கூருவதன் வழியாக, நாங்கள் இன்னொரு தளத்துக்கு, எங்களுடைய வாழ்வை, எமது மக்களை, எங்களுடைய எதிர்காலத்தை, நகர்த்தி செல்ல முடியும் என எண்ணுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.