மக்களின் உயிரை விட சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசின் தேவையாகவுள்ளது – சுஜித் சஞ்சய பெரேரா

unnamed 6
unnamed 6

கொவிட் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு 3 நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவது போதுமானதல்ல. எனினும் நாட்டில் தற்போது காணப்படுகின்ற அபாய நிலையைக் கருத்திற் கொள்ளாமல் துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்தை நிறைவேற்றி , சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாகவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நாட்டில் தற்போது காணப்படுகின்ற உண்மையான கொவிட் நிலைவரங்களை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

கொவிட் நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற 17 பில்லியன் நன்கொடை பிரயோசனமற்ற வகையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியிலும் அரசாங்கத்தின் சுரண்டல் இடம்பெற்றுள்ளதா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரல் , தனிமைப்படுத்தல் என்பவற்றிலும் அரசாங்கத்தின் சுரண்டல் இடம்பெற்றுள்ளது.

கொவிட் தொற்று தீவிரமடைய ஆரம்பித்த போதே நாட்டை முடக்குமாறு நாம் வலியுறுத்தினோம். எனினும் பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசாங்கம் அதனை புறக்கணித்தது. தற்போது நாம் கூறியதையே செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் 3 நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவதால் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது.

மக்களின் உயிரை விட துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்தை நிறைவேற்றி , சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாகவுள்ளது என்றார்.