துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்

R.Sanakkiyan 2

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகங்கள் ஒரு பிரத்தியேக ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினைகள் தலைதூக்கும் போது அதனை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அரசாங்கம் ஏதாவதொரு நாடகத்தை அரங்கேற்றும்.

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் சர்வதேச பாடசாலை, சர்வதேச வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் இலங்கையின் சாதாரண பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சீனர்களின் தேவைக்காகவே இவை உருவாகக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் தரப்பின் ஒரு சிலர் தேசப்பற்றாளர்களை போல் வீரவசனம் பேசி இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்தார்கள்.

சிங்களே போன்ற அமைப்புக்களும் தேசிய கொடியில் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்று தேவையற்ற கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டு வந்தார்கள். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் தேச பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்கள் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது ஆகவே மக்கள் இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.