மக்களின் உயிர்களை அலட்சியமாக பார்க்கும் நிலையில் அரசு உள்ளது – வேலு குமார்

எம்.பி 324x160 1
எம்.பி 324x160 1

நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் வேலு குமார் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரிக்கும் வேளையில் உரிய தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது.

மேலும் கொரேனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை எற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகின்றது. எனவேதான் சுகாதார துறை சார்ந்த பிரதான நான்கு அமைப்புகள் ஒன்றான இணைந்து வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருக்கின்றன.

அதாவது நாட்டை குறைந்த பட்சம் 14 நாட்களுக்காவது முடக்கி, மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டுமென அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச ரீதியான சில ஆய்வுகளின் ஆலோசனையாகவும் இவ்விடயமே முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதியோ அல்லது கொவிட் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியோ இதனை கருத்திற்கொள்வதாக தெரியவில்லை.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டை ஒரு நாள் முடக்கினால் 140 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுமென கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறுவதின் அடிப்படையில் பார்த்தால் கூட 14 நாட்களுக்கு 1960 கோடி ரூபாய் நட்டமே ஏற்படும். சமீபத்தில் சீனி மோசடியில் 1950 கோடி ரூபாய் நட்டம் அரசுக்கு ஏற்பட்டிருந்தமை அனைவருக்கும் தெரியும்.

மேலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றப்போது. மக்களின் உயிர்களை அலட்சியமாக பார்க்கும் நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.

அதாவது மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களாயின் நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.