கொரோனாவை கட்டுப்படுத்த வாய்ப்பிருந்தும் தவறிழைத்தது அரசு! – திஸ்ஸ விதாரண

திஸ்ஸ விதாரண
திஸ்ஸ விதாரண

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சமூகப் பரவலாக மாற்றம் பெற்று கட்டுப்பாட்டை மீறிய நிலையில் காணப்படுகின்ற போதிலும், இன்னமும் இதனைக் கொத்தணிகளுக்குள் முடக்கவே கொரோனாத் தடுப்புச் செயலணி முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுகாதார அமைச்சர் இந்த நிலைமைகளைக் கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளார். எனினும், சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நிலைமைகளைச் சரியாக விளங்கிக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, நான் வைரஸ் தொடர்பான நிபுணர் என்பது தெரிந்தும் என்னை இந்த வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ள அரசு ஆர்வம் காட்டவில்லை என நினைக்கின்றேன்.

எவ்வாறு இருப்பினும் இவை விமர்சித்துக்கொண்டு இருக்கவேண்டிய காரணியல்ல. தொடர்ச்சியாக முடக்கமொன்று இருக்க வேண்டும்; மக்களை முழுமையாக சுகாதார வழிமுறைகளின் கீழ் கொண்டுவர வேண்டும். மக்களின் அநாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படும்.

கொரோனா வைரஸ் பரவலை எம்மால் இலகுவாகக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருந்தன. உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பத்தில் எமக்குக் கொடுத்த 20 வீதமான தடுப்பூசிகளை அவசியமான நபர்களுக்குக் கொடுத்திருந்தால் நிச்சயமாக இந்தப் பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இதுவரை 70 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றியிருக்க வேண்டும்” – என்றார்.