எமது தாய்நாட்டினை பாதுகாக்க ஒன்றிணைவோம் – மக்களுக்கு பிரதமர் அழைப்பு

mahinda
mahinda

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சமுத்திர சூழலின் முக்கியத்துவம் குறித்து உலக சமூகத்தை விழிப்பூட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.

அபிவிருத்தி மற்றும் தொழில் மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளின் தாக்கத்தால் தற்போது கடல் மாசுபாடு அதிகரித்துள்ளது என்பது சூழலியல் நிபுணர்களின் கருத்தாகும்.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த நோக்கத்திற்காக, 2008 ஆம் ஆண்டில் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவி கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது.

கப்பல்கள் மூழ்குதல் மற்றும் அவை விபத்திற்குள்ளாதல் என்பன சமுத்திர மாசுபாட்டிற்கு நேரடி தாக்கம் செலுத்துவதுடன், அண்மையில் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை இழப்பீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்பது எனது நம்பிக்கையாகும்.

அதனால் நமது கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள், கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் மீதான தாக்கம் என்பவற்றை அளவிட முடியாது.

வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சமுத்திரமே´ எனும் இம்முறை உலக சமுத்திர தின தொனிப்பொருளின் மூலமும் சமுத்திரமும் அது சார்ந்த அனைத்து மதிப்புகளையும் நினைவு கூருகின்றேன்.

இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.