மாகாண சபைகளின் அதிகாரத்தை பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் – சிவசக்தி ஆனந்தன்

IMG 20210618 100738
IMG 20210618 100738

உயிர்த்தியாகங்களினால் உருவான மாகாண சபைகளுக்கான காணி, அதிகாரங்களை வழங்குவதற்கு மறுதலித்து வரும் சிங்கள, பேரினவாத அரசுகள் தற்போது மருத்துவம் மற்றும் கல்வி அதிகாரங்களையும் பறிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக மாகாண சபைகளை அதிகாரங்கள் அற்ற வெற்றுப்பொருட்களாக்குவதையே இலக்காக கொண்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இளைஞர், யுவதிகளின் உயிர்த்தியாகத்தினால் உருவானது தான் இந்திய இலங்கை ஒப்பந்தமும் அதன் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தமும் ஆகும்.

அதன் மூலம் தான் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இதில் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களுக்காக இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டிருந்தது என்பதே வரலாறு. இந்த நிலையில் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் மாகாண சபைகளுக்கு காணப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் காணி, காவல்துறை ஆகியவற்றை வழங்குவதற்கு மத்தியில் மாறிமாறி ஆட்சியில் இருந்த அத்தனை சிங்கள பேரினவாத அரசாங்கங்களும் மறுத்தன.

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு உருவாகும் என்றும், அது இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு கேடாகிவிடும் என்றும் சிங்களத் தலைவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். இவ்விதமான நிலைமை தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் மேலும் மோசமடைந்தது. ஒரேநாடு ஒரே சட்டம் என்ற சித்தாந்தத்தினை அமுலாக்கி 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக துடைத்தெறிவதற்கு கங்கணங்கட்டி கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், அடுத்துவரும் நாட்களில் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல் என்ற பெயரில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு திரைமறைவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு கொரோனா நெருக்கடி, இணையக்கல்வி போன்ற இதர விடயங்களையும் தமக்கான சாதமான நிலைமைகளாக மாற்றிக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய பின்னியில் மாகாண சபைகள் எவ்விதமான அதிகாரங்களையும் பயன்படுத்தாது இருக்கின்றபோது, அதனால் எவ்விதமான பயனுமில்லை என்று கூறி முழுமையாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதே திட்டமாக உள்ளது.

எனவே இந்த விடயத்தில் பங்கு தாரர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், சிவில் தலைவர்கள், மதத்தலைவர்கள் என்று அனைவரையும் உள்ளடக்கிய முறையான பொறிமுறையொன்றை முன்னெடுப்பதே சிறந்ததாகும் என்றுள்ளது.