சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை பிற நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும்! – ஜனாதிபதி

download 2 45
download 2 45

எதிர்காலச் சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக, சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்று தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

இதில் தொலை காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய புரிதலை சர்வதேச நாடுகள் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும்.

சேதன விவசாயம் என்பது, எமது நாட்டுக்குப் புதிதல்ல. புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் இதில் புத்துயிர்ப்பெற முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உணவு முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும்.

தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது.

மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும்.

இவற்றைத் தனியாக எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.