ஆளும், எதிர்தரப்புக்கள் தோல்வி: புதிய அரசியல் மாற்றம் அவசியம் – மங்கள அறைகூவல்

mangala 1
mangala 1

அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழுமையாக தோல்வி கண்டுள்ள நிலையில் பெரும்பான்மைவாதமற்ற மூவினங்களையும் ஒன்றிணைத்து இலங்கையர்களாக நாட்டை மீட்டெடுப்பதற்கான புதிய அரசியல் மாற்றம் அவசியம் என்று உண்மையான தேசப்பற்றாளர்கள் அமைப்பிற்கு தலைமை வகிப்பவரும், முன்னாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார். 

நாட்டில் உள்ள அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் வெறுப்படைந்து விரக்தியுற்ற நிலையில் நாடு பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலைமை தொடர்வதை தடுத்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு மூவினங்களையும் சேர்ந்த இளையோர் இலங்கையாளர்களாக அணி திரள வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். 

அண்மையில் மங்கள சமரவீர தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள உண்மையான தேசப்பற்றுள்ள அமைப்பின் அடுத்தகட்டச் செயற்பாடுகள், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவில் பங்கேற்றல், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, 

உண்மையான தேசப்பற்றுள்ள அமைப்பின் செயற்பாடுகள்
இலங்கை சுதந்திரமடைந்து 73வருடங்களாகின்றன. இந்தக்காலப்பகுதியில் வெவ்வேறு தரப்பினர் தேசப்பற்று தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்ததோடு கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் உண்மையான தேசப்பற்று இன்னமும் காணப்படவில்லை. 

இதுவொரு பெரும் குறைபாடாகும். தற்போதைய நிலையில் நாட்டின் எதிர்காலம் எதிர்கால சந்ததியினரிடத்தில் தான் கையளிக்கப்படவுள்ளது. ஆகவே அவர்கள் உண்மையான தேசப்பற்று என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். அதுபற்றிய முழுமையான புரிதல் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். 

இதனை நோக்கமாக கொண்டே உண்மையான தேசப்பற்றாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது அரசியல் நோக்கங்களைக் கொண்டது அல்ல. ஆனால் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், நீதித்துறைக்கு மதிப்பளித்தல் போன்ற சாதாரண விடயங்களை அடுத்த பரம்பரைக்கு நேர்மையாக கடத்த வேண்டியுள்ளது. 

அதற்கானதொரு தளத்தினை உருவாக்கும் பணியையே  உண்மைய தேசப்பற்றாளர்கள் அமைப்பு முன்னெடுக்கவுள்ளது. இது மூவின இளையோர்களையும் ஒன்றுபடுத்தும் மேடையாகவும் செயற்படவுள்ளது. இதன்மூலம் அனைவரும் இலங்கையர்கள் என்ற மனோநிலை ஏற்பட வேண்டும். அதனை முன்னெடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகவுள்ளது. 

எதிரணியுடன் ஒருங்கிணைவு
தற்போதைய நிலையில் நாடு பாதாளத்தினை நோக்கி விழுந்து கொண்டு இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் ஆளும் கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். நடைபெற்று வரும் அரசியல் கலாச்சாரத்தினால் அவர் வெறுப்படைந்து விரக்தியான நிலைமைகளில் இருக்கின்றனர். 

இவ்வாறானதொரு நிலையில் எதிரணிகள் வெறுமனே ராஜபக்ஷ தரப்பினருக்கு எதிராக ஒருங்கிணைவதால் எவ்விதமான பலன்களும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே அரசியலுக்கு அப்பால் நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அனைத்து சமூகத்தினரும் ஐக்கியப்பட வேண்டும். அதனைவிடுத்து அரசியலுக்காக அல்லது சாதாரணமாக ஒருங்கிணைவதால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.

அரசியலில் அடுத்த கட்டம்
என்னுடைய அடுத்தகட்டச் செயற்பாடுகள் மக்களுக்கானவை தான். நிச்சயமாக மக்களோடு மக்களாகவே செயற்படப்போகின்றேன். எந்தவொரு அரசியல் தரப்பினருடனும் இணைந்து பயணிக்க முடியாத சூழல் காணப்படுகின்றது. பல தரப்புக்கள் பிரிந்து பிரிந்து தனித்தனியாக நிற்கின்றார்கள். அரசியலுக்காக அல்லது அதிகாரத்தினைப் பெறுவதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் நாடு பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கின்றது. இதனை மீட்டெப்பதற்கு மூவின சமூகங்களிலும் உள்ள இளையோர் முன்வர வேண்டும். 1956ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் பெரும்பான்மை வாதமே பின்பற்றப்பட்டு வரப்படுகின்றது. 

ஆகவே முதலில் பெரும்பான்மைவாத அரசியல் கலாசாரத்தினை முழுமையாக ஒழிக்க வேண்டும். பெரும்பான்மை வாதம் தான் உண்மையான தேசப்பற்று என்று உருவாக்கப்பட்டுள்ள பொய்யான விம்பத்தினை உடைத்தெறிய வேண்டியுள்ளது. புதிய நிலைப்பாட்டில், சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவம், ஐக்கியம், நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்ப வேண்டும். 

இளையோர் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதன்  மூலமாக சுதந்திரம், நிதிக் கையாளுகை, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக அதிகமான கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்றார்.