வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் கலந்துரையாடல்!

unnamed 1
unnamed 1

இலங்கைக்கான வத்திக்கான் தூதுவரான பேராயர் பிரையன் உடைக்வே, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொறுப்புள்ள அனைவரையும் சட்டத்தின்முன் கொண்டுவருவதற்கான நீதியின் தேவைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விசாரணையின் தன்மையை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பேராயர் மாநாடு ஆகியவற்றுக்கு ஆரம்பத்திலேயே குறிப்பிடுவதன் மூலம், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வசதியாக தகவல்களை வெளிப்படுத்தும் கலந்துரையாடலொன்றின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் மற்றும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆகியவற்றின் அமர்வுகளை முன்னிலைப்படுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் உண்மையான நோக்கங்களுக்கு முரணான நிலைப்பாட்டை தமது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும் சில குழுக்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

தேவாலயத்தின் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாட முடியும் என்பதால், பேராயர் மாநாட்டின் ஒரு குழுவுடன் சந்திப்பொன்றை ஆரம்பத் திகதியில் ஏற்பாடு செய்வதனை வத்திக்கான் தூதுவர் இதன்போது பரிந்துரைத்தார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பாராட்டிய அமைச்சர், தேவாலயத்துடனான கலந்துரையாடலில் முழுமையான தகவல்களை வழங்குவதற்காக அரசாங்கம் அனைத்து விவரங்களையும் சட்டமா அதிபர் திணைக்களம், காவல்துறைமா அதிபர் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து சேகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.