வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற நான் தயார்! – சம்பந்தனிடம் ஜீவன் வாக்குறுதி

PHOTO 2021 10 19 18 21 06 11
PHOTO 2021 10 19 18 21 06 11

எனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். எனவே, வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை எழுத்துமூலமாக என்னிடம் ஒப்படையுங்கள்.

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் கோரினார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள அதிமூத்த அரசியல் தலைவரான சம்பந்தனை மரியாதை நிமிர்த்தம் நான் சந்தித்திருந்தேன். நீலன் திருச்செல்வத்துடன் பணியாற்ற ஆரம்பித்த காலமான 1983ஆம் ஆண்டியிலிருந்து சம்பந்தனையும் நான் அறிவேன். அந்த அடிப்படையில் அவருடனான சந்திப்பின்போது அவருடைய உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டேன்.

தொடர்ந்து வடக்கு மாகாண விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். என்னை வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமித்துள்ள நிலையில் அங்கு முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள விடயங்கள் பற்றி அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

அச்சமயத்தில் வடக்கு மக்களுக்குத் தேவையான உடனடியான விடங்கள் சம்பந்தமாக சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார். அந்த விடயங்களை என்னுடன் எழுத்துமூலமாகப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடத்தில் கோரியுள்ளேன். விரைவில் அதனை ஒப்படைப்பார் என்று நம்புகின்றேன்.

மேலும், வடக்கு மாகாணத்தின் மீள் எழுச்சி தொடர்பில் எனது அதிகாரத்துக்குட்பட்ட விடயங்களை நிச்சயமாக முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதையும் அவரிடத்தில் கூறியுள்ளேன். அதற்கு வரவேற்பைத் தெரிவித்த சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்” – என்றார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

“திருப்திகரமான சந்திப்பு. வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களைப் பேசினோம். இந்தச் சந்திப்பு தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை நான் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்” என்றார்.