ஒத்த நிலைப்பாட்டை உடையவர்களை உள்ளீர்ப்பதில் எமக்கு பிரச்சினையில்லை – மனோ பகிரங்க அறிவிப்பு

mano kanesan
mano kanesan

13 ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதை அடியொற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்படும் கூட்டு ஆவணச் செயற்பாட்டில் ஒத்த நிலைப்பாட்டை உடையவர்களை உள்ளீர்ப்பதில் எமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்படி கூட்டு ஆவணத்தயாரிப்பில் தமக்கு அழைப்பு விடுத்தால் தாமும் பங்கேற்பதற்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினை உள்ளீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்குமா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ள அரசியல் கட்சிகளில் எம்முடைய நோக்குடன் ஒத்த நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தரப்புக்களை இணைத்துக்கொள்வதில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் கிடையாது.

குறிப்பாக, அரசில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்வாங்கப்படுவதில் எமக்கு பிரச்சினைகள் இல்லை. அரசில் உள்ள கட்சிகள் எமது பொது நிலைப்பாடுகளுக்கு உடன்பாடு தெரிவித்தால் அவர்களையும் இப்போதே உள்வாங்குவதற்கு கூட நாம் தடையாக இருக்கப்போவதில்லை.

உண்மையில் அவர்களை உள்வாங்குவது இணைத்துச் செயற்படுவது அனைத்தும ஏற்பாட்டாளர்களது பணியாகும். நாம் அதுபற்றி பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. 

இ.தொ.கா. போன்ற மலையக கட்சிகள் மட்டுமல்ல, நீண்டகாலமாக 13ஆம் திருத்தம் பற்றி பேசிவரும் வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் தேவானந்தா தலையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஆனந்த சங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி போன்றவற்றையும் உள்ளீர்க்க முடியும். இவ்வாறு ஏனைய சில முஸ்லிம் கட்சிகளும் உள்ளன.

ஆனால், முதல் சுற்றில் எதிரணி கட்சிகளையும் பின்னர் ஆளும் அணி கட்சிகளையும் அணுகலாம் என்றே இந்த கூட்டு ஆவணத்தினை உருவாக்கும் செயற்பாட்டின் ஏற்பாட்டாளர்கள் எமக்கு கூறினார்கள். 

அவர்களது கூற்றில் ஒரு நியாயமான ஒழுங்குமுறை தெரிவதால், அதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆகவே, பொதுமக்கள் கருதி முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. அதனை வலுப்படுத்துவதற்காகவே செயற்படுவோம் என்றார்.