இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் ஜனாதிபதி மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் – சிறிதரன்

Sritharan MP 1
Sritharan MP 1

இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும்   மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் சிந்தனை இருப்பதாகவும்,  இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார். 

இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். 

அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்.

நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம்  நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

2019-11-18  ஆம் திகதி  ஜனாதிபதி அனுராதபுரத்திலே முதல் முதலாக தனது பதவியை ஏற்றிருந்தார். 

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ,இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்கள்,  குறிப்பாக தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனத்தினுடையை அடிப்படைகளை தூக்கி கடாசிவிட்டு தன்னுடைய மனதில் கூட அதனை சொல்ல முடியாத ஒரு தலைவராக இருக்கின்றார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதியின் உரை என்பது சகல இன  மக்களையும் அணைத்து செல்கின்ற ,அந்த மக்களை ஒன்றிணைத்து செல்கின்ற,  இலங்கை என்ற நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒரு மனிதனுடைய,ஒரு தலைவருடைய  உரையாக அது  அமையவில்லை.

மீண்டும் தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள் ,தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளில் மட்டும்தான் அவருடைய சிந்தனை இருப்பதாகவே ஜனாதிபதியின்  பேச்சு அமைந்துள்ளது. 

ஆகவே இந்த நாடு  நியாயமான அல்லது நீதியான  பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது. 

இங்கு எமக்கு பேச நேரம் தருவதில்லை. எமது கருத்துக்களைக்கூற முடியாதுள்ளது .அவ்வாறான ஒரு கொடூரமான அரசுக்குள் தான் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் எமக்கு தோன்றுகின்றது என்றார். 

அத்துடன் தென்னாபிரிக்காவின் கேப்டன் முன்னாள் பேராயர் டெஸ்மன்  டுட்டு,தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா போன்றவர்களையும்  தென்னிலங்கையர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .ஆட்சியாளர்கள் அவர்கள் வழி நடக்க வேண்டும் எனவரும் வலியுறுத்தினார்.