அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது: சஜித் – சம்பிக்க கரம்கோர்த்து செயற்பட வேண்டும் – மனோ

Mano 01
Mano 01

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி  ஆணைக்குழுவின் இன்று முன் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து அதுவும் விழும் பின்னர் இன்னொரு அரசாங்கம் ஆட்சிக்கு வரும் இதுவே வழமையாகியுள்ளது.

ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே புதிய அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டும்  என்பதை விட, புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்று தான் கூறவேண்டும்.

ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43 ஆம் படையணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும் என்றார்.