இன்று முதல் கியூஆர் முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள் – இறுதி இலக்க முறைமை ரத்து

a guide to qr codes and how to scan qr codes 1
a guide to qr codes and how to scan qr codes 1

நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான கியூஆர் முறைமையின் கீழ் மாத்திரம் இன்று முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள எண்னையும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கத்தையும் சரிபார்த்து எரிபொருளை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.

மோசடிகள் தொடர்பில் அவதானம்

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்தல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறையிட முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை 0742 123 123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் கியூஆர் குறியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறுதி இலக்க முறைமை ரத்து

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் வரை  எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும்,  வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மற்றும் கூப்பன் ஆகிய முறைமைகளில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.