வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- செல்வம்

Selvam Adaikalanathan 1
Selvam Adaikalanathan 1

வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் 
அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம். 


அந்தவகையிலே வடக்கிலே சீனாவினுடைய பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் வடக்கிலே கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அட்டைப்பண்ணை, இறால் பண்ணை இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவிற்கு எதிரானவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை சீனா செய்கின்றது என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 
ஆகவே அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுடைய கடமையாக இருக்கின்றது. ஏனென்றால் கரையோர பகுதியிலே இருப்பது தமிழர்களே.


சீனாவினுடைய ஆதிக்கம் வடக்கிலே குறிப்பாக கரையோர பிரதேசங்களிலே அவர்களுடைய கால் பதிப்பு என்பதனை அனுமதிக்க முடியாது. அபிவிருத்தி என்பதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது சீனாவின் முதலீட்டாக இருக்க கூடாது என்பது என்னுடைய கருத்து .


ஏனைய நாடுகள், ஏன் அயல் நாடான இந்தியாவில் கூட அபிவிருத்தி பணியிலே பண்ணைகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை செய்யலாம். எங்களை பொறுத்தமட்டில் வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது இந்தியாவினுடைய பாதுகாப்பினை தமிழர்கள் இன்றும் பாதுகாத்து கொண்டிருக்கின்ற சூழலிலே அதனை சிதைக்கின்ற வாய்ப்பாக கடலோர பகுதிகளிலே சீனாவினுடைய முதலீடுகள் வருவது கண்டிக்கத்தக்கது. அதனை அனுமதிக்க முடியாது.