அரசியல் கைதிகளின் உறவுகளை அவமானப்படுத்தியதனை வன்மையாக கண்டிக்கின்றோம்- மா.சத்திவேல்

IMG 20220708 203537
IMG 20220708 203537

அரசியல் கைதிகளை பார்வையிட வந்த உறவுகளை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியமையையும், உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதையும் வன்மையாக கண்டிப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
சிறைச்சாலைகள் தினத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிட வந்த உறவுகளை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டதையும் அவர்களுக்கு எதிராக இனவாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதையும் சிறைச்சாலை நிர்வாகமும், சிறைச்சாலைகள் அமைச்சும் விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவுகள் வருவது குறைவு. ஒரு சிலரை பார்வையிட உறவுகள் வருவதே இல்லை. இதற்கு பொருளாதாரம், நீண்ட தூரம், வந்து தங்கி செல்வதற்கான வசதியின்மை மட்டுமல்ல மொழி தெரியாது என்பதும் இதனால் தாம் அவமானப்பட்டு விடுவோமோ எனும் பயமும் ஒரு காரணமாகும். சிறைச்சாலைகள் தினத்தில் கூட்டாக வந்த போதும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை இனவாத வெறி, அதிகார மமதை என்றே கூற வேண்டும். 
சிறைச்சாலைகள் குடும்பதினம் என்பது கைதிகளுக்கு கிடைக்காத குடும்ப மகிழ்ச்சியை மீள பெற்றுக் கொடுப்பதும், அக் குடும்ப மகிழ்ச்சியை தக்க வைப்பதற்கு கைதிகள் திருந்துவதற்கான ஒரு மனநிலையை உருவாக்குவதுமே நோக்கமாகும். இத் தினத்தில் சுதந்திரமும் மனித உரிமையும் காக்கப்பட்டு உறவுகளும் கைதிகளும் மகிழ்வை அடைய வேண்டும் அத்தகைய மகிழ்வு தமிழ் கைதிகளுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் மறுக்கப்பட்டுள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும் எனில் சிறை அதிகாரிகளுக்கு சட்டம் தொடர்பில் மட்டுமல்ல சீருடைக்கும் கையில் வைத்திருக்கும் ஆயுதத்திற்கும் அப்பால் ஒழுக்கம், மனித உறவு, மனித கௌரவம் தொட ர்பிலும் பயிற்சி பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும். குற்றம் இழைத்த அதிகாரிகள் புனர்வாழ்வுக்கு அனுப் பப்பட வேண்டும். தமிழ ர்கள் விடயத்தில் இது நடக்கப் போவதில்லை என்பது கடந்த கால எமது அனுபவமாகும்.


இதே அதிகார மமதை மற்றும் இனவாத வெறி யில் கடந்த வருடம் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சராக இருந்தவர் அனுராதபு ரம் சிறைச்சாலைக்கு குடிவெறியில் தமது நண்பர்களோடு சென்று தமிழ் அரசியல் கைதி களை முழங்காலில் நிற்க செய்ததோடு ஒரு கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.அதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. அவர் மீண்டும் ராஜாங்க அமைச்சராக்கப்பட்டுள்ளமை ஆட்சியாளர்கள் நீதிக்கும், மனித உரிமைக்கும் விடுக்கும் சவால் என்று கூற வேண்டும்.
அதுமட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீர செய்கிற இது பௌத்த நாடு சிங்கள நாடு நாம் விரும்பியவாறு நாட்டில் எதையும் செய்யலாம் என்று தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூறி வருவதோடு தமிழர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுகின்றார்.

இது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல சாதாரண அதிகாரிகள் மட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமே அண்மையில் கொழும்பு மிக மிக சிறைச்சாலை நடந்த வேதனைக்குரிய சம்பவம் பெரும்பான்மை எனும் இனவாத சிந்தனை அகலாத வகையில் இனங்களுக்கிடையில் உறவு துருவமாகவே இருக்கும்.
அதேவேளை ஆட்சியாளர்கள் அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களையும் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக பயங்கரவாத சட்டம் நீக்கப்படும், புதிய பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறிக்கொண்டிருக்காது அதனை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.