சபதமெடுப்பது அரசியலென்றால் அதை நாங்கள் தொடர்ந்தும் செய்துகொண்டே இருப்போம்- சட்டத்தரணி சுகாஷ்

sukash 1 1
sukash 1 1

அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒற்றையாட்சியையும், பதின்மூன்றாம் திருத்தத்தையும் இவற்றை ஏற்கும் துரோகக் கும்பல்களையும் எதிர்ப்போம் என்று மீண்டும் சபதமெடுக்கின்றோம். அவ்வாறு சபதமெடுப்பது அரசியலென்றால் அதை நாங்கள் தொடர்ந்தும் செய்துகொண்டே இருப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.


அவரால் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“ஒற்றையாட்சிக்கும் 13ஆம் திருத்தத்திற்கும் எதிராக உண்ணா நோன்பிருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வழியில் பயணிக்க அவரின் நினைவுநாளில் சபதமெடுப்போம்” என்று கூறுவது எந்த வகையிலும் அரசியலாகாது. இதை யாராவது அரசியலாகக் காட்ட முற்படுவார்களென்றால் அந்த அரசியலை நாங்கள் தொடர்ந்தும் செய்து கொண்டே இருப்போம். 


ஒற்றையாட்சியையும் 13ஆம் திருத்தத்தையும் அவற்றை ஏற்கின்ற அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களையும் எதிர்க்க வேண்டியது – நிராகரிக்க வேண்டியது விடுதலையை நேசிக்கும் ஈழத் தமிழினத்தின் வரலாற்றுக் கடமை. இதை யாராவது தவறென்று கூறுவார்களென்றால், அவ்வாறு கூறுவோர் ஒற்றையாட்சியையும் பதின்மூன்றாம் திருத்தத்தையும் அவற்றை ஏற்கும் – ஏற்கத் தயாராகும் துரோகக் கும்பல்களையும் காப்பாற்ற முற்படுகின்றனரா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. இது வேதனையான விடயம்.


13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் கடிதத்தை சோரம்போன தமிழ்த் தலைமைகளிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்திய அரசும் ஈழத் தமிழினத்தின் இனப்பிரச்சனை மற்றும் இனப்படுகொலை விவகாரத்தை வெறும் 13ஆம் திருத்தத்திற்குள் முடக்க முற்படும் இலங்கை – இந்திய அரசுகளும் கங்கணம் கட்டிச் செயற்படும் இச்சூழலில், குறிப்பாக கடந்த 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 13ஆம் திருத்தத்தை இந்தியா வலியுறுத்திய நிலையில் அதற்கு எதிராக ஈழத் தமிழினம் தனது அபிலாஷைகளை வலியுறுத்துவதைத் தடுக்கும் முயற்சியாகவே பஷீர் காக்கா அவர்களின் கருத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.


தியாகதீபம் திலீபன் அவர்களின் புனிதமான நாளில் ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒற்றையாட்சியையும் பதின்மூன்றாம் திருத்தத்தையும் இவற்றை ஏற்கும் துரோகக் கும்பல்களையும் எதிர்ப்போம் என்று மீண்டும் சபதமெடுக்கின்றோம். அவ்வாறு சபதமெடுப்பது அரசியலென்றால் அதை நாங்கள் தொடர்ந்தும் செய்துகொண்டே இருப்போம் என்பதை ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.