இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து தொடந்தும் அழுத்தங்களை கொடுக்கும்: கஜேந்திரன்

IMG 1890
IMG 1890

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து தொடந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இராஜதந்திர கவுன்சில் ஏற்பாட்டில் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று (12) பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ உட்பட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்புப் பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்கப் பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

IMG 1886


இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் எமது மக்கள் படும் இன்னல்களையும், சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு சார்ந்தும் தெளிவாக அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். தாயகத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பின்லாந்து அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து, ஜெனிவா மனிதவுரிமைப் பேரவையில் தனது தெளிவான அழுத்தங்களைக் கொடுக்கும் என அவர்கள் எமக்கு இதன்போது தெரிவித்திருந்தனர்.  

அத்துடன், மனிதவுரிமை மேம்பாட்டு விடயங்கள் சார்ந்து பணியாற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அவர்களும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு நீதி கோரி சந்திப்புகளை செய்து வருகிறார்கள். குறித்த சந்திப்புக்களின் சர்வதேச இராஜதந்திர கவுன்சிலின் (ஐடீசிரிஈ) பின்லாந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.