தேர்தலை நடத்த வைப்போம்:தமிழரசின் பரப்புரையில் சுமந்திரன் முழக்கம்!

330834663 5901334933283753 5277701062340969744 n
330834663 5901334933283753 5277701062340969744 n

“தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும். நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல் பிற்போடப்பட்டால் அந்தக் குள்ளநரித்தனத்தையும் வெளிக்கொண்டு வருவோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-“மக்கள் தேர்தல் நடக்குமா என்று கேட்கின்றார்கள். ஜனாதிபதிக்கு தேர்தலைச் சந்திக்கப் பயம். இதன் காரணத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றார்கள். மாகாண சபைத் தேர்தலையும் பெரும் சூழ்சியால் காலவரையறையின்றிப் பிற்போட்டுவிட்டார்கள். 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தனிநபர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் நான் சமர்ப்பித்தேன்.இப்போது அவர்கள் என்ன செய்கின்றார்கள்? மாகாண அதிகாரமும் கிடையாது. உள்ளூராட்சி அதிகாரங்களையும் பாவிக்கவிடாமல் பறித்து எடுத்துவிட்டார்கள்.

மக்கள் ஆணை இல்லாமல் குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டுவரும் சூழ்ச்சிதான் தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் நடவடிக்கை. இதற்கு எதிராக நாங்கள் திரண்டெழ வேண்டும்.இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் தேர்தலைப் பிற்போட முனைகின்றார்கள். தேர்தல் வந்தால் ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் தூக்கி கடாசி விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகத் தெரியவரும்” – என்றார்.