அரசியல் தீர்வுக்கான காலத்தை இழுத்தடிப்பது அரசின் நோக்கமல்ல. அந்த நோக்கம் தமிழ்த் தரப்பினருக்கும் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுகூடி தீர்வை வென்றெடுக்க வேண்டும்.”– என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
‘தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து நியாயமான அடிப்படையில் இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் ஜனாதிபதி முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து முடிவொன்றை எடுத்துவிட்டு எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். முடிவுகள் எடுக்கப்படாது தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதானது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகவே இருக்கும். அவ்விதமான நிலைமைகள் தொடர்ந்தால், நாம் உரிய தீர்மானத்தை எடுப்போம். அதற்காக, அரசு முன்னெடுக்கின்ற பேச்சுக்களில் பங்கேற்காமல் விடப்போவதில்லை. நாங்களாக பேச்சுக்களை குழப்பியவர்களாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. அதேநேரம், நியாயமான தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், நாம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சம்பந்தனின் காலத்தில் அரசியல் தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்பதில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் மாத்திரமன்றி சிங்களத் தலைவர்களும் உறுதியாகவுள்ளனர். இந்தநிலையில் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் சம்பந்தன் வெளியிடும் கருத்துக்களை நாம் ஆழமாகச் சிந்திக்கின்றோம்.
தீர்வுத் திட்டத்தை தயாரித்துவிட்டு, பேச்சை ஆரம்பிக்கலாம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு எனது பதில் என்னவெனில் முதலில் பேச்சு மேசையில் சகல தரப்பினரும் கூடி ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து பேச்சைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் தீர்வுக்கான காலத்தை இழுத்தடிப்பது அரசின் நோக்கமல்ல. அந்த நோக்கம் தமிழ்த் தரப்பினருக்கும் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று கூடி தீர்வை வென்றெடுக்க வேண்டும்.” – என்றார்.