நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் ஐங்கரநேசன்?

Chinema 2
Chinema 2

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும் என்பார்கள். நம்மூரின் அரசியல்வாதிகள் எப்போதும் பாம்புகள்தான். அவர்களிடமுள்ள வித்தியாசம் தங்களுக்குத் தேவையான நன்மைகளை வேண்டுமளவு அனுபவித்த பிறகே அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டுவார்கள்.

பொ.ஐங்கரநேசன் அனைவருக்கும் தெரிந்த அரசியல்வாதி. இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தனது கொள்கையாக வைத்துள்ளவர். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் நெருங்கிய நட்புப் பாராட்டியவர். விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகி அரசியலில் தனித்துக் களமிறங்குவதற்கு இவரும் ஒரு காரணம்.

ஐங்கரநேசன் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய இக்கட்டின் பின்னர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்திருந்தார். இதன் அலுவலகத்தைத் திறந்து வைத்தவர் அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான். தமிழ் மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்பட முன்னராகவே அந்த அமைப்பையே கட்சியாக அறிவித்தார் ஐங்கரநேசன். இது விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் பலருக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டவர்களுக்கு “ஐயாதான் கட்சியை ஆரம்பிக்குமாறு கூறினார். அவர்தானே திறந்து வைத்தார் உங்களுக்குத் தெரியும்தானே…?” என்று பதில் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால், இதுபற்றி முதலமைச்சரிடம் விசாரித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர் அப்படிக் கூறவில்லை என்றும் அவர் திறந்து வைத்தது அமைப்பையே தவிர, கட்சியை அல்ல என்று. இப்படி அமைப்புக்கும் கட்சிக்கும் ஒரே பெயரை வைத்து அவர் நடத்தும் திருகுதாளங்கள் ஏராளம். சரி அதை ஒருபுறம் ஒதுக்கி விட்டு விடயத்துக்கு வருவோம்.

நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், அரசியலுக்கு வந்தபோது அது அவருக்குப் புதிது – வடக்கு மாகாணமும் அவருக்குப் புதிதாகத்தான் இருந்தது. ஏனெனில் அவர் வளர்ந்தது எல்லாமே கொழும்பில்தான். இங்கு நடந்த மிக மோசமான போர்காலம் இருந்தபோது அதை அவர் அனுபவிக்கவில்லை. ஊடகங்களின் அறிக்கையிடல்கள் மற்றும் சிலர் ஊடாக வந்த தகவல்கள் தவிர வேறு எதையும் அவர் அறிந்திருக்க நியாயமுமில்லை. வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் தெரிந்திருக்கவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவது போல, இங்குள்ள – தன்னோடு சேர்ந்து இயங்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் தன்னைப் போலவே நேர்மையானவர்கள் – நல்லவர்கள் என்று நம்பியிருந்தார். இதனால் அவரை சில அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தினர். இவர்களில் ஐங்கரநேசனும் ஒருவர்.

தான் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை விக்னேஸ்வரன் புரிந்து கொண்டதும், அவரின் ஆலோசனைகளை தவிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் வடக்கு மாகாண சபையில் ஊழல் விவகாரங்கள் சூடுபிடிக்கவே விக்னேஸ்வரனின் நம்பிக்கையைப்பெற அவரின் பொது வேண்டுகோளின் பெயரில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அது அவருக்கு ஓரளவு பலனளித்தது. ஆனாலும் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்த நாட்களில் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறவேண்டிய சூழலும் – தனியாகக் கட்சி தொடங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், ஐங்கரநேசனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ். உடன் ஆரம்பத்திலேயே பகைமை ஏற்பட்டு விட்டது. கூட்டமைப்பிலும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சிக்குள் அழைத்து வந்துவிடலாம். அதன் பிறகு தன்னையும் – கட்சியையும் யாரும் அசைக்க முடியாது என்பது அவரது கணக்காக இருந்தது. இதனால்தான் அவர் அவசர அவசரமாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தை ஆரம்பித்து முதலமைச்சர் தன்னுடன் இணையப்போகிறார் என முன்னெடுத்த பிரச்சாரம்.

இந்தப் பிரச்சாரம் விக்னேஸ்வரனின் காதுகளை எட்டியதும், அவருடன் பழகுவதில் கவனமாக இருந்தார். ஆனாலும், அவரை அணைத்துச் செல்லும் முடிவில் மாற்றம் இருக்கவில்லை. தமிழ் மக்கள் கூட்டணி பிறந்ததும், ஐங்கரநேசன் இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். கூட்டணி தொடர்பாக ஆரம்பத்தில் விக்னேஸ்வரனுடன் ஒத்துழைத்தார். ஆனால், அங்கு தான் மூன்றோடு நான்கே என்ற நிலை காணப்பட்டபோது வேறு திட்டத்தை வகுத்துவிட்டார். இவ்வளவு நாளும் கூட்டணி தொடர்பில் தொடர் பேச்சுகளை – சந்திப்புக்களை நடத்தி வந்த ஐங்கரநேசன் இப்போது, விக்னேஸ்வரனின் எந்த அழைப்புக்கும் பதில் அளிப்பதில்லையாம்.

காரணம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதுதான் என்கிறார்கள் ஐங்கரநேசனுக்கு நெருக்கமான வட்டாரங்கள். எப்படியும் தேர்தலில் ஒரு ஆசனம் தனக்குக் கிடைத்து விடும் என்பது அவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அவர் நெருக்கமான சிலருக்கும் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலை தனித்து எதிர்கொண்டு தனது பலத்தை வெளிப்படுத்துவதற்கு கடந்த உள்ளூராட்சித் தேர்தலும் ஒரு காரணம். நல்லூரில் அவரின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சை இரு ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆக இப்போது நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரு கை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம் என்பார்கள்… பொறுத்திருந்து பார்ப்போம்.