மதவாதியா க.வி.விக்னேஸ்வரன்?

cvw
cvw

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் கிறிஸ்தவ வேட்பாளரை நியமிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து சிறிகாந்தாவின் தமிழ்த் தேசிய கட்சியும் அனந்தி தரப்பும் வெளியேறப் போவதாக இணையம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சிவசேனை போன்ற இந்து அமைப்புக்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதன் உண்மை நிலவரத்தை தமிழ்க் குரல் ஆராய முற்பட்டவேளை பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து வேட்பாளர்களில் தமிழ் மக்கள் கூட்டணி ஐந்தும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியோர் தலா இரண்டும் அனந்திக்கு ஒன்றுமாக பகிர்ந்துகொண்டன.

தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் ஏனைய பங்காளிக் கட்சிகள் சார்பில் அதன் தலைவர்கள் போட்டியிடுவதால் யாழ். மாவட்ட அனைத்துத் தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வண்ணம் வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய தேவையிருந்தது. தென்மராட்சி, வடமராட்சி, தீவகம், கிளிநொச்சியிலிருந்து தலா ஒருவருக்கு கொடுத்துவிட்டு கூட்டணியின் தலைவர் என்றரீதியில் க.வி.விக்னேஸ்வரனும் போட்டியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அனைத்தும் சரியாகப் போய்க்கொண்டிருந்தவேளையில் வடமராட்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட நபர் வல்வெட்டித்துறை நகரசபையில் நான்கு உறுப்பினர்களைக்கொண்ட ஒரு சுயேட்சைக் குழுவின் ஆதரவைப்பெற்ற ஒருவராக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கத்தைவிட ஆதரவுபெற்ற ஒருவர். அவரைப் போட்டியிடுவதிலிருந்து ஒதுக்குவதற்காகவே மதப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்திருக்கிறது சிறிகாந்தா தரப்பு.

க.வி.விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் அந்தப் பகுதியில் மக்கள் ஆதரவைப் பெற்ற நேர்மையாளராக இருக்கவேண்டும் என்று விரும்பினாரே தவிர ஏனையவிடயங்களைக் கருத்தில்கொள்ளவில்லை என்கிறார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி உறுப்பினர் ஒருவர்.

அதே வேளை வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வவுனியாவில் வசிக்கும் முல்லைத்தீவில் வேலைபார்க்கும் மன்னாரிலிலும் மக்கள் செல்வாக்குள்ள ஒரு கிறிஸ்தவரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதியாகும் வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிறிஸ்தவ எம்பி ஒருவர் தலையிட்டு அவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணிசார்பில் போட்டியிடாமல் தடுத்துள்ளார் என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் செல்வாக்குள்ள எந்தக் கிறிஸ்தவரும் விக்னேஸ்வரன் அணிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் யாழ். மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளை எதிர்பார்த்திருக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

களநிலவரங்கள் இப்படி இருக்க, க.வி.விக்னேஸ்வரனை மதவாதியாக சித்தரிக்கும் முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றன சில ஊடகங்கள் என்கிறார்கள் விக்னேஸ்வரனின் நெருங்கிய வட்டாரங்கள்.